சென்னை: தமிழ்நாடு நிச்சயம் நீட் விலக்கு பெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு பெற, பாஜக தலைவர்கள் நயினார், தமிழிசை போன்றவர்கள் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் என கூறி ஆட்சியை பிடித்தது திமுக. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த ஆண்டு 5 முறையாக நீட் தேர்வு நடைபெறுகிறது. இதுவரை, அதை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர், நீட் நுழைவுத் தேர்வு வந்த நாள் முதல் இதில் மோசடிகளும், குளறுபடிகளும் நடந்து வருகிறது. இந்த தேர்வை உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும் கூட மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக இருந்து வருகிறது.
நேற்று நடத்த தேர்வின் போது, தாலியை கழட்டி வைத்து விட்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவியிடம் வலியுறுத்தியது எல்லாம் வரலாறு காணாத அத்துமிறல் என விமர்சித்தவர், இப்படி நீட் தேர்வால் மாணவர்கள் பல அழுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த இந்த நீட் தேர்வால் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டைப் போடுகிறது என்று கூறியவர், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு நிச்சயம் விலக்கு பெறும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழிசை சௌந்தரராஜன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அரசுக்கு உதவ வேண்டும். ஆனால் அதனை செய்யாமல், தேவையின்றி வீண் கருத்துக்களை கூறுவது அவர்களின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது என்றார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 10% வரை உயர்த்துவது குறித்து சட்ட வல்லுனர்களின் ஆலோசனை அவசியமானது. சட்ட வல்லுநர்களின் ஆலோ சனையின் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.