புதுச்சேரி: ‘புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்’  என மூத்த காங்கிரஸ் தலைவர்  பீட்டர் அல்ஃபோன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில், சிங்காரவேலர் சிலை அருகே  காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு புதுச்சேரி காங்கிரஸ்  கட்சியின் மாநில  தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தமிழக சிறுபான்மையினர் பிரிவு தலைவரான பீட்டர் அல்ஃபோன்ஸ் கலந்துகோண்டு உரையாற்றினார்.

 அப்போது, “காங்கிரசுக்கு சில நேரங்களில் தோல்வி தேவைப்படுகிறது. தோல்வி நேரத்தில் நம்முடன் இருப்பவர்களே உண்மையான தொண்டர்கள்.

அப்போது தான் நமது தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள எம்.பி.க்கள் மத்திய மந்திரி சபையில் அமைச்சர்களாக இருந்தனர். ஆனால், இப்போது முதலமைச்சர் ரங்கசாமியால் பிரதமருக்கு எதிராக அமர்ந்து பேச முடியுமா? தற்போது நடைபெறும் கூட்டணி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது.

அந்த வகையில், புதுச்சேரியில் மீண்டும் சிறப்பான ஆட்சி அமைய வேண்டும். அதற்காக, வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ், மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், மேனாள் முதல்வர் நாராயணசாமி  உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.