சென்னை: தமிழ்நாட்டில் மழலை குழந்தைகள் பள்ளிகளில் பாதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில்,  மாநிலம் முழுவதும் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள்  அரசு அனுமதியின்றி, முறைகேடாக செயல்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புற்றீசல் போல மூலை முடுக்கெல்லாம் தொடங்கப்பட்டுள்ள இதுபோன்ற மழலையர் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுப்பதில் திமுக அரசு மெத்தனம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

சமீபத்தில்,  மதுரையில் மழலையர் பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 7 பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், இந்த பள்ளி முறையாக செயல்படவில்லை என்றும், குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் கூறி, அந்த பள்ளிக்கு அரசு சீல் வைத்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் சுமார் 3000 மழலையர் பள்ளிகள் அரசின் உரிய அனுமதியின்றி இயங்கி வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.  திமுக அரசு உடடியாக உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அங்கீகாரம் இல்லாத மழலை பள்ளிகளை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியறுத்தப்பட்டு வருகிறது.

மிழகத்தில் ஒட்டுமொத்தமாக இயங்கிவரும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மழலையர் பள்ளிகளில் சுமார் 3 ஆயிரம் மழலையர் பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த பட்சம் 5.5 செண்ட் இடம், கட்டட வசதி, வகுப்பறை வசதி, நிர்வாக அனுமதி, தீயணைப்பு வசதிக்காக பல்வேறு துறைகளிடமிருந்து அனுமதி பெற வேண்டிய நிலையில், விதிகளை பின்பற்றாமல் விளம்பரங்களால் மட்டுமே பல பள்ளிகள் இயங்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 64 மழலையர் பள்ளிகளில் 25 பள்ளிகள் மட்டுமே உரிய அனுமதியோடு இயங்கி வருவதாகவும், மற்ற பள்ளிகளுக்கு இது தொடர் பாக நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாநில தனியார் பள்ளிகள் சங்கம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது

மழலைப் பள்ளிகளில் இதுபோன்ற துயரச்சம்பவங்கள் நடைபெற்ற பின் அதற்கான காரணங்கள் குறித்து ஆராயாமல், தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.