டெல்லி: 2025 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. , இதை என்டிஏ அறிவித்துள்ளது.

நாடு  முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு மே 4ஆம் தேதி  நடைபெற உள்ள நிலையில், அதற்கான  நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4, 2025 அன்று ஆஃப்லைன் முறையில் நடைபெறும். இது எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது.

2025- 2026 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். மொத்தம் 20 லட்சதுக்கும் அதிகமான  மாணவ மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கான தேர்வு வரும் மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மதியம் 2.00 மணிக்கு இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்காக இன்று ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் சிலருக்கு ஆதார் அங்கீகாரத்தை செய்ய வலியுறுத்தி தேசிய தேர்வு முகமை தகவல் அனுப்பியுள்ளது.  அதன்படி ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் பிற சான்றிதழ்களை கொடுத்து, அதாவது வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான்கார்டு போன்ற வேற ஐ.டி.,களை கொடுத்து பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ஆதார் சரிப்பார்ப்பு செய்ய சொல்லி தேசிய தேர்வு முகமை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளது.

ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பதிவு செய்துள்ளார் என்பதை சரிபார்க்க ஆதார் சரிபார்ப்பை தேசிய தேர்வு முகமை கோருகிறது. எனவே மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ நீட் தேர்வு இணையதளத்திற்குச் சென்று, தேர்வர் உள்நுழைவு பக்கத்திற்குச் செல்ல வேண்டும். பின்னர் உங்கள் தனிப்பட்ட உள்நுழைவு சான்றுகளை அதாவது பயனர் ஐ.டி, பாஸ்வேர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். பின்னர் ஆதார் அங்கீகாரத்திற்கான தகவல்களை கொடுத்து சமர்பிக்க வேண்டும்.

ஆதார் கொடுத்து பதிவு செய்தவர்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்காது. அவர்கள் கவலைப்பட வேண்டாம். ஆதார் பதிவு இல்லாதவர்கள் மட்டுமே இப்போது பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.