இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதட்டங்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த நிலையில், பதற்றங்களை அதிகரிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை இதுதொடர்பாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ விரைவில் பேசுவார் என்று தெரிவித்துள்ளது.
அணு ஆயுதம் ஏந்திய ஆசிய அண்டை நாடுகளுடன் பல மட்டங்களில் தொடர்பில் இருப்பதாகவும், அதே நேரத்தில் “பொறுப்பான தீர்வு” என்று அழைக்கப்படுவதை நோக்கிச் செயல்படுமாறு வலியுறுத்துவதாகவும் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் கூறியது.
“நாங்கள் இரு தரப்பினரையும் அணுகி, நிலைமையை அதிகரிக்க வேண்டாம் என்று அவர்களிடம் கூறுகிறோம்” என்று ரூபியோவின் அறிக்கையை மேற்கோள் காட்டி வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
செவ்வாய் அல்லது புதன்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் ரூபியோ பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா பாகிஸ்தானைக் குற்றம் சாட்டியது. பாகிஸ்தான் பொறுப்பை மறுத்து நடுநிலை விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளையில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் இதுவரை பாகிஸ்தானை விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.