காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தொடர்ந்து, இன்று 6வது நாளாக தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் 22-ந் தேதி அன்று இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்டது, பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரிய வந்துள்ளது. இந்தியா இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதையடுத்து பாகிஸ்தானும் எல்லை பகுதியில் ராணுவத்தை குவித்து வருவதுடன், தங்களிடம் அணுகுண்டுகள் இருப்பதாக மிரட்டி வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தினசரி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இன்று 6வது நாளாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய பாக். ராணுவத்துக்கு பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் தகவல் அளித்துள்ளது.
காஷ்மீரின் நவ்ஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.