சென்னை: காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சி காலத்தை விமர்சித்துடன், ஊர்ந்து…. தவழ்ந்து என கூறினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற உயரம் இந்தியாவே காணாதது. மேலே பாம்பு கீழே நரிகள் குதித்தால் அகழி ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் ஒன்றிய அரசு மறுபக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு, தமிழர்கள், மாநில உரிமைக்காக எனது பயணம் தொடரும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading…. அதில் இன்னும் சாதனைகள் படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும் என்று கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், அ.தி.மு.க. அரசு ஊர்ந்து சென்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததை ஏற்க முடியாது. தி.மு.க. அரசின் பார்ட் 2 பெயிலிர் தான் என கூறினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், ஊர்ந்து என்பதற்கு பதிலாக தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள். என்று கூறியதுடன், தான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, உறுத்தினால் சொல்லுங்கள் நீக்க சொல்லுவோம். அன் பார்லிமென்ட் சொல்லி மட்டுமே அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியும் என்றார்.
இதனை தொடர்ந்து ஊர்ந்து, தவழ்ந்து என்று முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.