சென்னை: தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 102 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும். காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என கூறினார்.
”காலனி என்ற சொல் வசைச்சொல் ஆக மாறி இருப்பதால், அதை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.
இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கலைஞர் கூறுவார். கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.
இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் ஒன்றிய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது.
அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். தமிழகம் அமைதியான மாநிலமாக இருப்பதற்கு போலீசார் தான் காரணம். சட்டம் ஒழுங்கில் கல் விழாதா எனத் துடிப்பவர்கள் எண்ணத்தில் மண்தான் விழுந்திருக்கிறது; சாதி, மதக் கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழகத்தில் உள்ளது. வன்முறை செய்ய வேண்டும் என சிலர் நினைத்தாலும் தமிழக மக்கள் முறியடித்துள்ளனர். குற்றச் சம்பவம் நடந்தால் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகம் என்பது மணிப்பூர் அல்ல, காஷ்மீர் அல்ல. இது தமிழகம் மறந்துவிட வேண்டாம்.நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று பிடிவாதமாக இருப்பவன் நான் அல்ல. போலீசார் சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது, ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். குற்றம் நடந்த உடன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை பாராட்டுகிறேன்.
இவ்வாறு கூறினார்.