சென்னை: தமிழ்நாட்டில் வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில், சென்னையில், 1000 கி.மீ நீள வடிகால்களை தூர்வார சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3,040 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இந்த வடிகால் அமைப்பு மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான முறை என கூறப்பட்டது. ஆனால், பல பகுதிகளில் இந்த மழைநீர் வடிகால் பகுதியே கழிவுநீர் வடிகாலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் பலர் இந்த வடிகால்களில் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், மழை காலத்த்தின்போது, வடிகால்கள் மூலம் மழைநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது,. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இந்த நிலையில், சென்னையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை முழுமையாக தடுக்கும் வகையில், வடிகால் பணிகள் சிறந்த முறையில் தூர்வாரி கட்டமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உள்ளத. இந்தாண்டு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது.
அதன்படி, சென்னை மாநகர எல்லையில் 1,000 கி.மீ. நீள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை மாநகராட்சி தொடங்க உள்ளது. இதன் மூலம் நீரோட்டம் சீராகவும், வெள்ள நீர் தேங்குவது குறையவும் வழிவகை செய்யப்படும். இந்தத் திட்டத்தில், தூர்வாரும் பணிக்கு முன்னும் பின்னும் வடிகால்களின் நிலையை புகைப்பட ஆவணமாக்க, சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
சென்னையில் உள்ள புயல் நீர் வடிகால் வலையமைப்பு மொத்தம் 3,040 கி.மீ. நீளம் கொண்டது. இதில் 1,084 கி.மீ. இந்த ஆண்டு தூர்வாரப்பட உள்ளது. மழை தொடங்குவதற்கு முன், உயர் திறன் கொண்ட உறிஞ்சு மற்றும் தண்ணீர் பீய்ச்சும் இயந்திரங்களை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் வெற்றிட தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. உயர் திறன் கொண்ட உறிஞ்சு மற்றும் தண்ணீர் பீய்ச்சும் கருவிகளை வாடகைக்கு எடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 4,000 கன மீட்டர் அளவு சேறு, கழிவு மற்றும் நீரை உறிஞ்சும் திறன் கொண்டவை. இந்த தூர்வாரும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.