26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் உசேன் ராணாவின் காவலை 12 நாட்கள் நீட்டித்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. NIAவின் மனு மீது நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
18 நாள் NIA காவல் முடிவடைந்ததை அடுத்து, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சிறப்பு NIA நீதிபதி சந்திரஜித் சிங் முன் ராணா ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணைக் குழு நடவடிக்கைகளில் தேசிய புலனாய்வு முகமையின் பிரதிநிதிகளாக மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்தர் மான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில், டெல்லி சட்ட சேவைகள் ஆணைய வழக்கறிஞர் பியூஷ் சச்தேவா, தஹாவூர் ராணா சார்பில் ஆஜரானார்.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த கொடிய தாக்குதலில் 174 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா நடத்தியது.
இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதில் ராணா முக்கிய பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார், ஆனால் அந்த நேரத்தில் அவர் அமெரிக்காவில் இருந்தார். அவர் 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
இருந்தபோதும் நாடுகடத்தலுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்ததை அடுத்து அவரை இந்தியா கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது.
அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தற்போது இந்தியா கொண்டு வரப்பட்டுள்ள ராணாவிடம் 2008 ஆம் ஆண்டு நடந்த கொடிய தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முழு சதித்திட்டம் குறித்து NIA விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அவரது காவலை மேலும் 12 நாட்கள் நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.