சென்னை: இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு  இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்., கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் எல்.முருகன்  உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கம் உடல்நலம் பாதிப்பு காரணமாக,  காலமானார்.  அவருக்கு வயது 84,  அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில மாதங்களாக வயது தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்தார். நேற்று  காலை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்  காலமானார். அவரது உடலுக்கு நாளை இறுதி சடங்கு நடைபெறுகிறது.

மறைந்த கஸ்தூரி ரங்கன் உடல் ஏப்ரல் 27 அன்று இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஆர்ஆர்ஐ) வைக்கப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு  இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்,   “டாக்டர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் இனி இல்லை என்பதை அறிந்து (நான்) வருத்தமடைந்தேன். இஸ்ரோவின் தலைவராக, இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் பரிணாம வளர்ச்சியில் அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அறிவு மீதான ஆர்வத்துடன், பல்வேறு துறைகளிலும் அவர் பெரும் பங்களிப்பைச் செய்தார்.” “அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் ஏற்கனவே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கையை வரைவதற்கு அவர் உதவினார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்” என்று முர்மு ‘எக்ஸ்’ இல் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ‘X’  தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,   “இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்விப் பயணத்தில் ஒரு உயர்ந்த நபரான டாக்டர் கே. கஸ்தூரிரங்கனின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைகிறேன். அவரது தொலைநோக்குத் தலைமைத்துவமும், தேசத்திற்கு தன்னலமற்ற பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும். அவர் இஸ்ரோவிற்கு மிகுந்த விடாமுயற்சியுடன் சேவை செய்தார், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை புதிய உயரங்களுக்கு வழிநடத்தினார், அதற்காக நாங்கள் உலகளாவிய அங்கீகாரத்தையும் பெற்றோம். அவரது தலைமை லட்சிய செயற்கைக்கோள் ஏவுதல்களையும் கண்டது மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்தியது.” தேசிய கல்விக் கொள்கை (NEP) வரைவின் போது மற்றும் இந்தியாவில் கற்றல் மிகவும் முழுமையானதாகவும், எதிர்காலத்தை நோக்கியதாகவும் மாறுவதை உறுதி செய்வதில் டாக்டர் கஸ்தூரிரங்கன் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும் என்று அவர் கூறினார்.

“அவர் பல இளம் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தார். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி,” என்று அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இஸ்ரோ முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் கஸ்தூரிரங்கன் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் கஸ்தூரி ரங்கன்.

மிகச் சிறந்த அறிவியலாளராக இருந்ததோடு மட்டுமில்லாமல், மாநிலங்களவை உறுப்பினர், திட்டக்குழு உறுப்பினர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் எனப் பல உயர்நிலைகளிலும் தனது அறிவாற்றலால் அப்பொறுப்புகளுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  விண்வெளி தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் கொடியை உயர்த்திய புகழ்பெற்ற வானியற்பியல் நிபுணர் கஸ்தூரிரங்கனின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக முதல்வர் சித்தராமையா கூறினார். கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் கஸ்தூரிரங்கன், நமது மாநிலத்தின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார் என்று அவர் கூறினார்.

மேலும்,  “இந்தியாவின் பெருமைமிகு இஸ்ரோவின் தலைவராகவும், மையத்தின் விண்வெளி கவுன்சிலின் இயக்குநராகவும் டாக்டர் கஸ்தூரிரங்கனின் நீண்டகால சேவை, விண்வெளி அறிவியல் துறையில் இந்தியாவை சர்வதேச அளவில் அங்கீகரிக்கச் செய்துள்ளது”  டாக்டர் கஸ்தூரி ரங்கனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல். அவர்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். மறைந்த ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்,” என்று  தெரிவித்து உள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்  இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரும், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவராக செயல்பட்டவருமான டாக்டர் திரு.கஸ்தூரி ரங்கன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். டாக்டர் கஸ்தூரி ரங்கன் அவர்களது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, தேசத்தின் விஞ்ஞானம் மற்றும் கல்வி சார்ந்த வளர்ச்சிகளுக்கு தனது பெரும் பங்களிப்பை வழங்கிய அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் என்று  கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கை 2020 இன் வடிவமைப்புக் குழுவின் தலைவருமான டாக்டர் கஸ்தூரி ரங்கன் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானியாக நம் தாய்நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மறைந்த கஸ்தூரி ரங்கன், புதிய தேசிய கல்வி கொள்கை (NEP) வரைவு குழுவின் தலைவரான கஸ்தூரிரங்கன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், கர்நாடக அறிவு ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். அவர் ராஜ்யசபா உறுப்பினராகவும் (2003–09) அப்போதைய இந்திய திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். கஸ்தூரிரங்கன் ஏப்ரல் 2004 முதல் 2009 வரை பெங்களூருவில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். முன்னாள் இஸ்ரோ தலைவர், அக்டோபர் 24, 1940 அன்று கேரளாவின் எர்ணாகுளத்தில் சி.எம். கிருஷ்ணசாமி ஐயர் மற்றும் விசாலாட்சி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவரது குடும்பம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடியில் குடியேறியது. அவரது தாயார் பாலக்காடு ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். விண்வெளி விஞ்ஞானி, ஆகஸ்ட் 2003 இல் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு, ஒன்பது ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக பணியாற்றினார். அவரது சிறந்த பணிக்காக அவருக்கு 2000 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
HinduTamil23rdAprilHinduTamil23rdApril