சென்னை: 3 பிரபல ரவுடிகள் சென்னைக்குள் நுழைய ஓராண்டு தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்ஆணையர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா, லெனின் ஆகிய 3 பேர் மீது ஆங்கிலேயர்கள் 137 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய சென்னை நகர காவல் சட்டம் 51ஏ-ன் கீழ் சென்னைக்குள் ஓராண்டு நுழைய தடை விதித்து போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை மாகாணமாக இருந்த போது நாட்டிலேயே ஆங்கிலேயர்கள் முதல் போலீஸ் கமிஷனர் அலுவலகம் தொடங்கினர். அதேநேரம் நாட்டில் எந்த நகரங்களுக்கும் இல்லா அதிகாரம் சென்னை நகர காவல்துறைக்கு ஆங்கிலேயர்கள் வழங்கினர். அந்த சட்டத்தின்கீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, குறிப்பிட்ட ரவுடிகள், சென்னை மாநகரக்குள் நுழைந்தால், எந்தவித கட்டுப்பாடும் இன்றி குற்றவாளியை கைது செய்து, ஜாமின் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்பட முடியும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் ந வெளியிட்ட அறிக்கையில் , சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதாய கொலை பழிவாங்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய ரவுடிகளை கண்டறிந்து அவர்கள் மேல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் நுழைந்து பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய ரவுடிகளை கண்டறிந்து அவர்கள் மீண்டும் இதுபோன்ற கொடுஞ்செயல்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் துணை கமிஷனர்களால் பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் அச்சறுத்தல் தரக்கூடிய மற்றும் தங்களுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சாட்சிகளை மிரட்டக்கூடிய வரலாற்று பதிவேடு உடைய ரவுடிகளாக கண்டறியப்பட்டு பரிந்துரை செய்யப்பட்ட பி.லெனின், கு.நெடுங்குன்றம் சூர்யா, ஜெ.ராஜா(எ)ராக்கெட் ராஜா ஆகிய 3 ரவுடிகள் மீது நேற்று சென்னை நகர காவல் சட்டப்பிரிவு 51 ஏ-ன் படி வெறியேற்றுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட 3 ரவுடிகளில் பி.லெனின் மீது 6 ெகாலை, 12 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 குற்ற வழக்குகள் உள்ளது. அதேபோல் கு.நெடுங்குன்றம் சூர்யா மீது 5 கொலை, 12 கொலை முயற்சி வழக்கு உட்பட 64 குற்ற வழக்குகள் உள்ளது. அதேபோல், ஜெ.ராஜா(எ)ராக்கெட் ராஜா மீது 5 கொலை, 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 20க்கும் குற்ற வழக்குகள் உள்ளது. இதன் மூலமாக மேற்படி ரவுடிகள் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவோ அல்லது காவல்துறையினர் விசாரணை தொடர்பாகவோ இல்லாமல் வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் நுழைவது இன்று(நேற்று) முதல் ஓராண்டு காலத்திற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் மேற்படி ரவுடிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் அறிக்கை எல்லாம் சரிதான். ஆனால், ரவுடிகள் காவல்துறையினரிடம் அனுமதி பெற்றுக்கொண்டா ஊருக்குள் வருகிறார்கள் என நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தற்போது அரசியல்வாதிகள்க இருப்பவர்கள் பலர் ரவுடிகளே … சென்னையில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் கஞ்சா விற்பனை செய்து வரும் ரவுடிகளை ஒழிக்கவே நாதியில்லை… இதுல இவரு ரவுடிகள் சென்னுக்குள் நுழைய தடை என படம் வேற காட்டுராறு என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடிக்கிறார்கள்…