டெல்லி:  வக்ஃப் சட்டம்: திருத்தம் தனிநபரின் மத உரிமையைப் பாதிக்காது என்றும்,  வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 இன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி. வக்ஃப் மையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது

வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, அதற்கான காரணங்களை தமது பதில் மனுவில் விவரித்துள்ளது.

முன்னதாக, வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது (ஏப். 16 மற்றும் 17ந்தேதி) விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன், வஃபு  திருத்த மசோதா செயல்பாட்டுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

அப்போது உச்சநீதிமன்றம்

1)  பயன்பாட்டின் அடிப்படையிலான வக்ஃப் ( waqf-by-user) சொத்துக்கள், இனி வக்ஃபாக அங்கீகரிக்கப்படாதா?

2) சச்சரவு உள்ள பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற அதிகாரி விசாரணையை முடிக்கும் வரை அவை வக்ஃப் சொத்து அல்ல எனக்கூறுவது நியாயமா?

3) வக்ஃப் என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டதை பிரிவு 2A எப்படி மீற முடியும்?

4) புதிய திருத்தங்களுக்குப் பிறகும் மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருப்பார்களா? என கேள்விகளை எழுப்பியது.

மேலும் விசாரணையின் போது, கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் வாயிலாக நீண்ட காலத்துக்கு முன்பே வக்ஃப் சொத்துக்களாக இருப்பவை ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதை குறிக்கும் வகையில், திருத்தங்கள் வாயிலாக வரலாற்றை மாற்றி எழுத முடியாது என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.

“நீண்ட காலத்துக்கு முன்பே வக்ஃப் சொத்துக்களாக உள்ளதை அரசு எப்படி பதிவு செய்யும், அவர்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும்? (வக்ஃப் சட்டம்) தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் நியாயமானவையும் உள்ளன.”

மேலும், “இந்து அறக்கட்டளைகள் என்று வரும்போது, அதை நிர்வகிப்பவர்கள் இந்துக்களாகவே உள்ளனர்,” என நீதிபதி விஸ்வநாதன் தெரிவித்தார்.

அப்போது, “அவை இந்துக்கள் அல்லது இந்து அல்லாதவர்கள் அடங்கிய நிர்வாக குழுக்களால் நிர்வகிக்கப்படுவதாக” சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

அதற்கு, நீதிபதி சஞ்சய் குமார், “திருப்பதி கோவில் நிர்வாகக் குழுவில் இந்துக்கள் இல்லை என கூற முடியுமா?” என சொலிசிட்டர் ஜெனரலுக்கு கேள்வி எழுப்பினார்.

அப்போது, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சில வாக்குறுதிகளை கூறியது. “இந்த வழக்கின் மீதான தங்கள் கருத்தை மத்திய அரசு ஏழு நாட்களில் தெரிவிப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வாக்குறுதிகளை நாங்கள் பதிவு செய்துகொள்கிறோம்,” என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம்  பரிந்துரைத்தது. ஆனால், சொலிசிட்டர் ஜெனரலின் தொடர் வேண்டுகோளுக்கு ஏற்ப மத்திய அரசின் வாதத்துக்காக அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு, வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இன்றைய விசாரணையில், ஒரு சட்டத்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடை விதிப்பதென்பது அசாதாரணமான நடவடிக்கை என்றும் வெறும் சட்டத்தின் ஷரத்துக்களை மட்டுமே படித்துவிட்டு அவ்வாறு செய்ய முடியாது என்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

“லட்சக்கணக்கான கருத்துக்களின் அடிப்படையில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமங்கள் வக்ஃப் சொத்துக்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது பெருவாரியான அப்பாவி மக்களை பாதித்துள்ளது.” என்றும் தெரிவித்தார்.

மேலும், தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்க ஒருவார கால அவகாசம் வேண்டும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் கோரினார்.

நீதிபதி கூறியது என்ன? அப்போது தலைமை நீதிபதி, “நாங்கள் சில குறைகளை சுட்டிக்காட்டியுள்ளோம். சில நேர்மறையான விஷயங்களும் இருப்பதாகக் கூறியுள்ளோம். ஆனால், இன்று உள்ள சூழல் மாற வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. ஐந்து ஆண்டுகள் முஸ்லிமாக இருப்பவர்கள்தான் வக்ஃப் அமைப்புக்கு சொத்து வழங்க முடியும் என பிரிவு உள்ளது, அதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை.

நீங்கள் சொல்வது போல ஒரு சட்டத்துக்கு நீதிமன்றம் சாதாரணமாக தடை விதிக்காது என்பது ஒரு விதியாக உள்ளது. ஆனால் அதே சமயம், ஒரு விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதென்றால் தற்போதுள்ள சூழல் மாறக்கூடாது, அதன்மூலம் மற்றவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்” என தெரிவித்ததாக லைவ் லா செய்தி குறிப்பிடுகிறது.

இதுதொடர்பாக மத்தியஅரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 1,332 பக்கங்கள் கொண்ட பதில் மனுவில், ‘வக்பு திருத்த சட்டத்தில் மத சுதந்திரம் பறிக்கப்படும் என்று வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டம் யாருடைய மத சுதந்திரத்தையும் பறிக்காது. வக்பு நிர்வாகத்தில் திறம்பட்ட மேலாண்மை, வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவே சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு பிறகு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. இரு அவைகளிலும் நீண்ட நேரம் விவாதம் நடத்தப்பட்டது. பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பொதுவாக, மக்களின் அடிப்படை உரிமைகள் மீறல், சட்டப்பூர்வதன்மை குறித்து மட்டுமே உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யலாம். வக்பு என்பது முஸ்லிம் மத அமைப்பு கிடையாது. அது ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு ஆகும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இருந்த வக்பு நிலங்களைவிட தற்போது வக்பு நிலங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது.

அதாவது, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 20 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் வக்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சூழலில் அரசு மற்றும் தனியார் நிலங்கள் முறைகேடாக அபகரிக்கப்படுவதை தடுக்கவே வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

மத்திய வக்பு கவுன்சிலில் மொத்தம் 22 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் முஸ்லிம் அல்லாத 4 பேர் மட்டுமே சேர்க்கப்படுவர். இதேபோல வக்பு வாரியங்களில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் முஸ்லிம் அல்லாத 3 பேர் மட்டுமே சேர்க்கப்படுவர். இதனால் வக்பு கவுன்சில், வாரியங்களில் முஸ்லிம்களின் பெரும்பான்மை குறைந்துவிடும் என்று கூறுவது தவறான கருத்தாகும். முஸ்லிம் அல்லாதவர்களின் சொத்துகளையும் வக்பு வாரியங்கள் உரிமை கொண்டாடுகின்றன. இதற்கு தீர்வு காணவே வக்பு கவுன்சில், வாரியங்களில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்து மத அமைப்புகள், வக்பு வாரியங்களுக்கு இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இந்து மத அமைப்புகள், இந்து அறக்கட்டளைகள் அந்தந்த மாநில அரசுகளின் சட்ட வரம்புக்கு கீழ் வருகின்றன. இரண்டையும் ஒப்பிட முடியாது.

வக்பு வாரியங்களால் நிலங்களை இழந்த மக்களின் புகார்கள், விவரங்கள் பதில் மனுவோடு இணைக்கப்பட்டு உள்ளன. வக்பு திருத்த சட்டம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் வழங்கிய யோசனைகள், நாடாளுமன்ற கூட்டுக் குழு வழங்கிய பரிந்துரைகள் உட்பட அனைத்து அம்சங்களும் பதில் மனுவோடு இணைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் பதில் மனு குறித்து அடுத்த 5 நாட்களில் மனுதாரர்கள் தங்களது பதில் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஏஐஎம்ஐஎம் கட்சி உட்பட குறிப்பிட்ட 5 மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட 5 மனுதாரர்கள் தரப்பில் அடுத்த 5 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யப்படும்.

உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்தபடி வரும் மே 5-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அன்றைய தினம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.