சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகனை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிம் தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ள துரைமுருகன் கடந்த 1996-2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தார்.

அப்போது துரைமுருகன் தனது வருமானத்துக்கு மீறி அதிக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள், சகோதரர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பாய்ந்தது.

இந்த வழக்கு வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடந்த 2007 இல் தீர்ப்பு வழங்கினார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

வழக்கை , தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி மாதம் ஒத்திவைத்த  நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தது.

இன்று சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின்கீழ், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.