சென்னை

ப்ரல் 25 ஆம் தேதி தமிழக ஆளுநரை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக முத்தரசன் அறிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணி அளவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் முத்தரசன், எம்.பி. சுப்பராயன், மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பழனிசாமி, ராமசாமி, பத்மாவதி மற்றும் மூர்த்தி, ரவி உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை கண்டித்து, வரும் 25ம் தேதியன்று (25-4-2025), தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட இக்கூட்டத்தில்,தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் உறைபொருளும், மறைபொருளும் சுட்டிக்காட்டுவது, தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேந்தராக தொடர முடியாது என்பதே ஆகும்.

மாநில அரசு உரிய சட்ட ஆலோசனைகளைப் பெற்று, தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

மத்திய அரசு உடனடியாக சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.

ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கையையும், அதற்குத் துணையாக குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையும் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.