சென்னை: தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அதன்படி, இன்று தீரன் சின்னமலையின் 269 பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தீரன் சின்னமலை கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற கொங்கு மாவட்டங்களில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.