துரை

துரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண தரிசன டிக்கட் முன்பதிவு வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது.

மதுரையில் அமைச்ந்துள்ள உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

பிறகு மே 6-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 7-ந் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது. இதில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மே 8-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும்.  மே 9-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.

பக்தர்கள் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு தரிசிக்க ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் முன்பதிவு செய்யலாம். கோவில் இணையதளமான maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் வருகிற 29-ந் தேதி முதல் மே 2-ந் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஒருவர் தலா 2 ரூ.500 கட்டணச்சீட்டை மட்டுமே பெற முடியும். ரூ.200 கட்டணச்சீட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டை பெற முடியாது. பிறந்த தேதியை சரியாக பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு செல்போன் எண் மட்டுமே பயன்படுத்த முடியும்.