சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று பேரவையில் அறிமுகம் செய்தார். அப்போது,  எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்தோடு திராவிட மாடல் அரசு செயல்படுகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்  மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாவதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இன்று செய்தித்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

அப்போது,  கோவையில் அமைக்கப்படும் செம்மொழிப்பூங்காவில் தமிழ்த்தாய் உருவச் சிலை நிறுவப்படும்,  டெல்லி ஜே.என்.யூ. பல்கலையில் பன்னோக்கு கலையரங்கம் அருகில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்படும், மதுரவாயல் பகுதியில் உள்ள திரு.வி.க. நூலகம் புதுப்பிக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியானது.

இன்றைய அமர்வில், கேள்வி நேரத்தை தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற  கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மூன்று அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், அதை விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால், அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அவையில், முதலமைச்சர் ஸ்டாலின்,  மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்கிறார்.

அதைத்தொடர்ந்து இந்த சட்ட முன்வடிவு குறித்து பேசிய முதல்வர்,  உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமிக்கும் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. கலைஞர்தான் மாற்றுத்திறனாளி என்ற சொல்லை உருவாக்கினார் என கூறியதுடன்,  எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்தோடு திராவிட மாடல் அரசு செயல்படுகிறது , குரலற்றவர்களின் குரலாக திராவிட மாடல் ஆட்சி இருக்கும் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது என்றார்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என்று கூறிய முதலமைச்சர்,  மாற்றுத்திறனாளி களுக்கான நிதியை ரூ.1,432 கோடியாக உயர்த்தி உள்ளோம் என்று தெரிவித்ததுடன்,  மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக நிதி தருவதில் தமிழ்நாடு தான் முன்னணி என்று சுட்டிக்காட்டினார்.

மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கில்தான்,  உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை நிலைநாட்ட அரசு உறுதியாக உள்ளது.

அதன்படி,   அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

புதிய அறிவிப்பின் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும். 

இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன். அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை முன்மொழியும் வாய்ப்பை கலைஞர் எனக்கு வழங்கினார். அப்போது எப்படி பெருமை அடைந்தேனோ, அதே பெருமையை இப்போது அடைகிறேன் என்றார்.

இதனை தொடர்ந்து சட்டமுன் வடிவை நிறைவேற்ற சபாநாயகர் அப்பாவு குரல் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த சட்டமுன்வடிவிற்கு பெரும்பாலான உறுப்பினர் கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது.