சென்னை: டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த இரு நாட்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான விசாரண நடைபெற்று வந்தது.

நேற்றைய விசாரணையின்போது (ஏப்ரல் 15) டாஸ்மாக்’ வழக்கில்  தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங்  மற்றும் அட்வகேட் ஜெனரல் பிஎஸ்இராமன் ஆகியோர் வாதாடினர். இதைத்தொடர்ந்து,   ‘டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, ஈ.சி.ஐ.ஆர்.,  Enforcement Case Information Report (ECIR) என்ற வழக்கு தகவல் பதிவேடில் குறிப்பிட்டுள்ள, முதல் தகவல் அறிக்கைகளின் விபரங்களை தாக்கல் செய்யுங்கள்’ என, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றின் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒருநாள் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து, நேற்று முன்தினம் மற்றும் நேற்றும்  3வது நாளாக  விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும்  டாஸ்மாக் நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது,   விசாரணையை துவக்கிய அன்றே, அமலாக்கத்துறை நேரடியாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்ததன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியதுடன்,

சோதனைக்கு வந்த நாளில், முதல் தகவல் அறிக்கையை தவிர, வேறு எந்த ஆதாரங்களும், அமலாக்கத்துறை வசம் இல்லை என்று குற்றம் சாட்டினர்.

மேலும்,  மத்திய விசாரணை அமைப்புகளுக்கு, தமிழக அரசு வழங்கி இருந்த ஒப்புதல், 2023ம் ஆண்டு ஜூன், 14ல் திரும்ப பெறப்பட்டு விட்டது. அப்படி இருக்கும் போது, அவர்கள் மாநில அரசின் அனுமதியின்றி செயல்பட முடியாது. இந்த வழக்கில்,  மாநில அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய முடியாது.

அதனால்  எந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என்பதை, அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கில்,  முதல் தகவல் அறிக்கைகள் விபரங்கள் இல்லாமல், வாதங்களை முன் வைப்பது என்பது இயலாத காரியம்.

நாட்டில் உள்ள, 29 மாநிலங்களில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அமலாக்கத்துறை விசாரணை நடத்த துவக்கினால், அந்த அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில்,  அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடும்போது,   ”அமலாக்கத் துறை நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. டாஸ்மாக் நிறுவன பெயர், முதல் தகவல் அறிக்கையில் இல்லை.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவான  42 முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் சோதனை நடத்தியதாக, அமலாக்கத்துறை கூறுகிறது. டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தது தெரியவந்தால், அது தொடர்பாக மாநில அரசு உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.

எந்த அடிப்படையில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து டாஸ்மாக் அதிகாரிகளுக்கு துளியும் தெரியாது என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். சோதனையின்போது அமலாக்க அதிகாரிகள் எந்த ஆவணத்தையும் வழங்கவில்லை. தகவல் அறிக்கையின் (இ.சி.ஐ.ஆர்) நகலோ (அ) தேடல் வாரண்ட் நகலோ டாஸ்மாக் அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை என்றார்.

நீதிமன்றத்தில் தற்போதைய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, 1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக டாஸ்மாக் அதிகாரிகள் மீது சில ஆண்டுகளாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (டி.வி.ஏ.சி) பதிவு செய்த சுமார் 42 முதல் தகவல் அறிக்கைகளின் (எஃப்.ஐ.ஆர்) அடிப்படையில் இ.சி.ஐ.ஆர் பதிவு செய்ததாக அமலாக்கத் துறை கூறியது.

ஊழல் குற்றச்சாட்டின்பேரில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது டி.வி.ஏ.சி பதிவு செய்த அனைத்து எஃப்.ஐ.ஆர்களிலும் டாஸ்மாக் புகார்தாரராகவோ (அ) குற்றத்தால் பாதிக்கப்பட்டவராகவோ இருந்திருக்கும் என்று வலியுறுத்திய அட்டர்னி ஜெனரல், நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மதிக்காமல் அரசுக்கு சொந்த மான ஒரு நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை நடத்த இந்த எஃப்.ஐ.ஆர்கள் எவ்வாறு அடிப்படையாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

60 மணி நேரம் நீடித்த சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளின் போது டாஸ்மாக் அதிகாரிகள் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர் புகார் கூறினார். அந்த அதிகாரிகளும் நாட்டின் குடிமக்கள் என்பதாலும், வலிமையான அமலாக்கத் துறையை தனிப்பட்ட முறையில் எதிர்த்துப் போராட முடியாத அளவுக்கு பலவீனமாக இருப்பதாலும், தற்போதைய ரிட் மனுவின் மூலம் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று அவர் வாதிட்டார்.

42 எஃப்.ஐ.ஆர்களின் பின்னணியில் உள்ள பணமோசடி கோணத்தை விசாரிக்க அதன் உதவியைக் கோரி மாநில அரசுக்கோ (அ) டாஸ்மாக்கோ முகவரியிட்ட ஒரே ஒரு தகவலை அமலாக்கத் துறைக்கு அனுப்புமாறு அமலாக்கத் துறைக்கு ஏ-ஜி சவால் விடுத்தார்.

மணல் குவாரி வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை பல்வேறு கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதாக அவர் கூறினார். ஆனால், டாஸ்மாக் விசாரணையில் அப்படி எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.

அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், முதல் தகவல் அறிக்கையை அமலாக்கத்துறை மறைக்க முடியாது என்று வாதிட்டார். விசாரணையை தொடங்கிய அன்றே அமலாக்கத் துறை நேரடியாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்கான நோக்கம் என்ன?. சோதனைக்கு வந்த நாளில் முதல் தகவல் அறிக்கையை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அமலாக்கத் துறை வசம் இல்லை என்றார்.

பி.எம்.எல்.ஏ.வின் விதிகள் நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையவை என்பதால் அவை கடுமையானவை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியபோது, வழக்கறிஞர் விகாஸ் சிங் பதிலளித்தார். “பொருளாதார குற்றங்களை மாநில காவல்துறை விசாரிக்கக்கூடாது என்பதுபோல் இல்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங் களுக்கும் அமலாக்கத்துறை சென்று அங்குள்ள கலால் அலுவலகங்களில் சோதனை நடத்தினால், அதன் நம்பகத்தன்மை புரியும். அதில்தான் சிக்கல் உள்ளது” என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘டாஸ்மாக் முறைகேடு புகார் விசாரணைக்கு, அமலாக்கத் துறைக்கு மாநில அரசு உதவலாமே’ என, கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ”சட்டத்தை மீறி, அமலாக்கத்துறை இவ்வளவு செய்த பின் எப்படி உதவ முடியும்; அமலாக்கத்துறை சோதனை நடந்து கொண்டிருக்கும் போது, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் வரை மோசடி என, தேசிய கட்சியின் மாநில தலைவர் பேட்டி அளித்துள்ளார். அதற்கு என்ன அர்த்தம்,” என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து நீதிபதிகள்,  ‘டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, ஈ.சி.ஐ.ஆர்., என்ற வழக்கு தகவல் பதிவேடில் குறிப்பிட்டுள்ள, முதல் தகவல் அறிக்கைகளின் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என, அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு (ஏப்ரல் 16ந்தேதிக்கு)  தள்ளிவைத்தனர்.