சென்னை: பிரதமர் மோடி விமர்சனம் எதிரொலியாக, அரசு ஊழியர்கள் இனி தமிழில் தான் கையொப்பம் இட வேண்டும்” தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டின் அரசாணைகள் தமிழில்தான் வெளியிட வேண்டும், அரசுப்பணியாளர்கள் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும், பொது மக்களுக்கு தமிழிலே பதிலளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழ் மொழியில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் பாம்பன் திறப்பு விழா (ஏப்ரல் 6ந்தேதி) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழியின் பாரம்பரியம் உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்றடைந்துள்ளது. 21ம் நூற்றாண்டில் தமிழகத்தின் பாரம்பரியத்தை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். மீனவர்களின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும். மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 3700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தமக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது. எனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போடுகள் என்று கூறியிருந்தார். அதுபோல உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், இந்தியை மட்டும் ஊக்குவிப்பதாகக் கூறும் திமுகவில் ஒருவருக்கு தமிழில் கையெழுத்து கூட போடத்தெரியாது என விமர்சனம் செய்திருந்தார்.
இதையடுத்து தமிழ் தமிழர்கள் என்று கூவும் அரசியல்வாதிகளே தமிழை புறக்கணித்தது வெட்டவெளிச்சமானது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு, இனிமேல் தமிழ்நாட்டில், அரசு பணிகள் அனைத்திலும் தமிழை முதன்மைபடுத்த ஆணையிட்டு உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, அரசுப்பணியாளர்களுக்கும் தமிழ் கட்டாயம் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசுப்பணியாளர்கள் கையொப்பம் தமிழிலேயே இருக்க வேண்டும் எனவும், அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை தமிழ் வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது,
“தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியைப் பயன்படுத்தவும் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதாவது,
அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்
சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும்
துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.
வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடிதம் போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் எழுதுவதுமில்லாமல், அவை பற்றிய குறிப்புகள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும்
அரசுப்பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்
ஆங்கிலத்தில் வெளியிட விலக்களிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கேற்ப தலைமைச்செயலகத் துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பிவைக்கவும் அல்லது அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசாணைகளை தேவைப்படின் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது,”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]