நெல்லை: பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்டவர்  அமைச்சர் பொன்முடி.  இவரைப்போன்றவர்கள்  கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து  விலகிய காளியம்மாள் காட்டகமாக விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவர் காளியம்மாள். இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. எதிர்க்கட்சிகளை ஆதாரத்தோடு, கலை நயத்துடன் விமர்சிப்பதில் தேர்ந்தவர் காளியம்மாள். அதனால் அவரது கூட்டதுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. சமீபத்தில், காளியம்மாள் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மன வருத்தம் அடைந்த காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகினார். விலகில் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,  தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் அ. வியனரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  தமிழ்நாட்டில், ஆட்சித்தமிழ் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், தேசிய சாலைகளை சுங்க சாவடிகளற்ற சாலைகளாக மாற்ற வேண்டும், முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப் பட்டது.  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காளியம்மாள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்ததுடன், சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  “கச்சத்தீவை மீட்பது தொடர்பான எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் எந்த அரசியல் கட்சியும் அரசும் எடுக்கவில்லை. தேர்தல் நேர வியூகமாகவே கச்சத்தீவு பயன்படுத்தப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்று இருந்தபோது கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. பாஜக அரசும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மகளிர் உரிமைத்தொகை என்று மாதம் ஆயிரத்தை கொடுத்துவிட்டு மதுபான கடைகள் மூலம் மாதம் ரூ. 15 ஆயிரத்தை ஒவ்வொரு வீட்டு பெண்களிடம் இருந்தும் அரசு பறித்துக்கொள்கிறது.

மதுபான ஆலைகளை நடத்திக்கொண்டு மதுபான கூடங்களை மூடப்போவதாக நாடகம் நடத்தி கொண்டிருக்கின்றனர்.

அரசியல் பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழகத்திற்கு தரவேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் அரசியல் கணிக்க முடியாத ஒன்று. எப்போது யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள், எப்போது யாரிடமிருந்து வெளியே வருவார்கள் என்பதை தேர்தல் வரை காத்துக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

இப்போது கூட்டணி என சொல்லலாம் பிறகு மறுக்கலாம் எதனையும் ஊர்ஜிதமாக சொல்ல முடியாது. எனது அடுத்த கட்ட முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

அப்போது செய்தியாளர்கள் திமுக அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறிய காளியம்மாள்,   பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்டவர் அமைச்சர்  பொன்முடி என்றவர். இவரை போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்” என காட்டமாக கூறினார்.