சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன்  இன்று மாலை பொறுப்பேற்றார். அவருக்கு முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுக பாஜக கூட்டணி உறுதியான நிலையில், மாநில பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து அண்ணாமலை விலகிக்கொண்டார். இதையடுத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர்  இன்று மாலை  புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.  நயினார் நாகேந்திரனுக்கு கூட்டத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு (2026)  தேர்தல் நடைபெற உள்ளது.  இதையடுத்து திமுக கூட்டணி தனது தேர்தல் வேலைகளை ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தவெக, நாம் தமிழர் கட்சிகளும்  களத்தில் இறங்கி உள்ளன. மேலும்  கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுக்கு இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் பாஜக தமிழ்நாட்டிலும் அதிகாரம் செலுத்தும் வகையில், அதிமுக உள்பட சில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிமுக பாஜக கூட்டணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் , 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மாநில பாஜக தலைமையை மாற்ற பாஜக தலைமை முடிவு செய்தது. அதற்கு அண்ணாமலையும் ஒத்துக்கொண்ட நிலையில்,   பாஜக மாநிலத் தலைவர் போட்டிக்கு விதிமுறைகளுடன் விருப்ப மனு நேற்று விநியோகிக்கப்பட்டது. ஆனால் விதிமுறைகளில் நயினார் நாகேந்திரனுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அவரை தவிர வேறு யாரும் விருப்ப மனு கொடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து இன்று பாஜக மாநிலத் தலைவர் யார் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று பாஜக புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற இந்த அறிவிப்பு விழாவில் பாஜக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளதை, திமுக உள்பட சில கட்சிகள் விமர்சித்து வருகின்றன.