சென்னை: அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.

என்டிஏ குடும்பத்தில் இணைந்தது ரொம்ப மகிழ்ச்சி! தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி அமைக்கும்,  திமுகவை என்டிஏ கூட்டணி வீழ்த்தும் என்றும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வசைபாடி வந்த நிலையில், இரு கட்சிகளும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மேலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பெரு வெற்றி பெற்றது. இதே வெற்றியை 2026 சட்டமன்ற தேர்தலிலும்   தக்க வைத்துக்கொள்ள திமுக கூட்டணி களப்பணியாற்றி வருகிறது.

இதையடுத்து, மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட வேண்டும் சில தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால், இனிமேல் எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.  அதுபோல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது.  பாஜகவுடன் அதிமுக கூட்டணி  உருவாகி இருப்பதை பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான  அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக,    தமிழக  அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்ம நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்,

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபட்டு, வலுவாக!

அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. எங்கள் மற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டாளிகளுடன் சேர்ந்து, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம்,

மாநிலத்திற்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வோம்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உறுதி செய்வோம்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும்,

ஊழல் மற்றும் பிளவுபடுத்தும் திமுகவை விரைவில் வேரோடு பிடுங்குவது முக்கியம், அதை எங்கள் கூட்டணி செய்யும்.

இவ்வாறு கூறியுள்ளார்.