சென்னை: அதிமுக பாஜக கூட்டணி குறித்த எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாஜகவின் கொள்கைகள் தமிழகத்திற்கு எதிரானது என்றும், அதிமுக முடிவை தமிழக மக்கள் ஏத்துக்கமாட்டாங்க என நெல்லை முபாரக் விமர்சித்துள்ளார்.
இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்த தோழமை கட்சியான எஸ்டிபிஐ கட்சி, அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விரைவில், திமுக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக மாநிலதலைவர் அண்ணாமலையும் மாற்றம் செய்யப்பட உள்ளார். இந்த நிலையில், அதிமுக பாஜக கூட்டணிக்கு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அதிமுக எத்தனை காரணங்களைக் கூறினாலும், அவற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கூட்டணிக்குப் பின்னால், ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் கொடுத்த அழுத்தம் மற்றும் நெருக்கடியே முக்கிய காரணம் என்பதை அரசியல் புரிந்தவர்கள் மட்டுமின்றி பாமர மக்களும் அறிவார்கள். இத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்து, பாஜகவுடன் கூட்டணி என்கிற தமிழகத்தின் நலனைப் பறிகொடுக்கும் அதிமுகவின் முடிவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மாநில உரிமைகளையும், மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உள்ளது. ஆனால், அதிமுகவின் இந்தக் கூட்டணி முடிவு, அந்தக் கடமையை மறந்து, ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடா நட்பு கேடாய் முடியும் என்பது பழமொழி மட்டுமல்ல, அரசியல் உண்மையும் கூட. பாஜகவுடன் கூட்டணி வைத்த பல மாநிலக் கட்சிகள் இன்றைக்கு அவை தங்கள் அரசியல் அடையாளத்தை இழந்து, மக்களின் நம்பிக்கையைத் தொலைத்து, தோல்வியின் பாதையில் நிற்கின்றன. இந்தக் கூட்டணி மூலம், அதிமுகவும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் பாஜகவுடன் கைகோர்ப்பது, எந்தவொரு மாநிலக் கட்சிக்கும் அழிவைத் தவிர வேறு எதையும் கொண்டுவராது. தமிழகம் என்பது சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு உறுதியாக நிற்கும் மண். பாஜகவின் கொள்கைகள் எப்போதும் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானவை, சமூகநீதிக்கு எதிரானவை, மாநில உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பவை. இத்தகைய பாஜகவை, எந்த வழியில் வந்தாலும், யார் மீது சவாரி செய்து வந்தாலும், எந்த உருவில் வந்தாலும், தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாஜகவை மட்டுமல்ல, அதன் கூட்டணியையும் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.
இவ்வாறு கூறி உள்ளார்.

முன்னதாக, நெல்லை முபாரக் கடந்த 10ந்தேதி அன்று சென்னை வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்து வந்த SDPI கட்சி யின் தலைவர் நெல்லை முபாரக், திடீரென முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது பேசுபொருளானது.
முதல்வருடனான சந்திப்பு குறித்து கூறிய முபாரக், வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கும், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்ததற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தனது நன்றியை தெரிவித்ததாக கூறினார்.
இந்த நிலையில், அதிமுக பாஜக கூட்டணியை விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார். இதன் காரணமாக, எஸ்டிபிஐ கட்சி திமுக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.