சென்னை: சென்னையில் சாலையோரம் உள்பட கண்ட கண்ட இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5ஆயிரம் முதல் ரூ.25000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கை ஏப்.21ம் தேதி முதல் அமலாக உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் குப்பை கூளங்கள், கட்டிட கழிவுகளை சாலையோரங்களிலும், ஆளில்லாதவர்கள் வீடுகள் முன்பும், கால்வாய் கரைகளிலும் கொட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மழைநீர் செல்வது தடைபடுவது மட்டுமின்றி, கால்வாய்கள், கால்வாய் ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் கால்வாய் நீர் செல்வதிலும் சிக்கல் எழுகிறது.
இதனையடுத்து க ட்டிட கழிவுகளை கொட்டுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த முக்கிய விதிமுறைகள் வருகிற 21ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கட்டிட கழிவுகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டும் நபர்களுக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கும் நடைமுறை வரும் 21ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
விதிமுறைகள் விவரம்:
குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை அகற்றுவதற்கு 1913 என்ற மாநகராட்சியின் உதவி எண்ணிலும் நம்ம சென்னை செயலி மூலமும் பதிவு செய்து இலவச சேவையை பெற்று கொள்ளலாம்.
சிறிய வீடுகள் பழுதுபார்ப்பு, ஓடுகள், குளியல் தொட்டிகள், அலமாரிகள், வாஷ்பேசின்கள், உடைந்த பீங்கான், சானிட்டரி பொருட்கள் மூலம் 1 மெட்ரிக் டன் வரை சென்னை மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்ட 15 இடங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளப்படும்.
ஒன்று முதல் 10 டன் வரையிலான கட்டிட கழிவுகளை அகற்ற, சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட லாரி உரிமையாளர்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது, தாங்களாகவே அகற்ற வாகனங்களை அமர்த்தலாம் அல்லது சென்னை மாநகராட்சி சேவையைப் பயன்படுத்தி மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.2500 கட்டணத்தில் கட்டிடக் கழிவுகளை சேகரித்து ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யலாம்.
மேற்கண்ட எந்த முறைகளில் கழிவுகள் அகற்றப்பட்டாலும், அவற்றை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அங்கு எடை கணக்கீடு செய்யும் பணியாளர் மூலம் எடை கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணம் தெரிவிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி இணையதளம் மூலமாக பணம் செலுத்தப்பட்ட பின்னர் கட்டடக் கழிவுகள் குப்பை கொட்டும் வளாகங்களுக்குள் அனுமதிக்கப் படும்.
கழிவுகளை கொடுங்கையூர் அல்லது பெருங்குடி செயலாக்க மையங்களுக்கு கொண்டு சென்று பதப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.800 செலுத்த வேண்டும்.
ஒருநாளில் 20 மெட்ரிக் டன்னிற்கு மேல் அல்லது ஒரு மாதத்திற்கு 300 மெட்ரிக் டன் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் உருவாக்குவோர், 600 சதுர மீட்டருக்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட கட்டடத்தை இடிக்கும் பணிகளை மேற்கொள்பவர்கள், 6000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுமானம் அல்லது பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்பவர்கள் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்ற வாகனங்களை தாங்களாகவே அமர்த்தி கொடுங்கையூர் அல்லது பெருங்குடி செயலாக்க மையங்களுக்கு கொண்டு வர வேண்டும்.
செயலாக்க மையத்தில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படும். சென்னை மாநகராட்சியின் இணையதளம் மூலம் இதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அபராத விதிமுறைகள்
சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல், பொது இடங்களில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுபவர்களுக்கு அபராதமாக ரூ.5000 மாநகராட்சியின் சார்பில் வசூலிக்கப்படும்.
மழைநீர் வடிகால், திறந்தவெளி மற்றும் பிற பொதுமக்களின் பயன்பாட்டுப் பகுதிகளில் வழிகாட்டுதல்களை மீறி கட்டுமான மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை கொட்டும் பெருமளவு கழிவுகள் உருவாக்குவோருக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.5000/- கடுமையான அபராதமும்,
சிறிய அளவில் கழிவுகள் உருவாக்குவோர் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.3000/- கடுமையான அபராதமும் விதிக்கப்படும்.
கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றாத 6000 சதுர மீட்டர் கட்டுமானம் அல்லது பழுதுபார்க்கும் பணி அல்லது 600 சதுர மீட்டர் இடிபாட்டுக் கழிவுகள் எனில், நாள் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.