சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள மின்தேவையை கருத்தில்கொண்டு, கூடுதலா 7,915 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொளுத்தும் வெயிலையொட்டி, கோடைகால மின் தேவையை சமாளிக்க, கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின்சார வாரியம்சொந்த மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் உற்பத்தி நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் பல்வேறு மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் நீண்ட கால மற்றும் நடுத்தர கால டெண்டர்களின் கீழ், மின்சார தேவையை மின்சார வாரியம் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் கோடைக்கால தேவையை பூர்த்தி செய்வதற்காக, கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் வருகிற மே 10 ஆம் தேதி வரை தேவையான காலக்கெடுவிற்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு ஆணையத்திடம் ஒப்புதல் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. அதன்படி, மொத்தம் 7,915 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தொழில்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சி காரணமாக, மாநிலத்திற்குள் மின்சாரத் தேவை கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின்சாரத்திற்கான தேவை படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், 2022 ஆண்டு முதல் 2024 வரை தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக நுகர்வு ஏற்பட்டது.
இந்நிலையில்,கோடைகால மின் தேவையை சமாளிக்க, கூடுதலாக 7,915 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.