சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் முன் அறிவிப்பின்றி  விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், ஓய்வின்றி உழைக்கும்  அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் திடிரென விடுமுறை எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு முறையான விடுமுறைகள் கொடுக்கபடாததால், அவர்கள் முன்னறிவிப்பு இன்றி ஏதாவது ஒரு காரணத்தை கூறி பணிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால், சில நேரங்களில் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,   முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தினசரி இயக்க வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart-ல் ஓட்டுநர், நடத்துநர்களிடம் கையொப்பம் பெற வேண்டும். மாலை 5மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும். அடிக்கடி பணிக்கு வராமல், முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது,,