சிவகங்கை: பாண்டியன் கோட்டை அகழ்வாய்வில் இரும்பு மற்றும் செம்பால் ஆன பொருட்கள் மற்றும், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் மோசிதபன், கூட்டம் என எழுதப்பட்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. இது தொல்லியல்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் தொல்லியல் ஆய்வாளர்களின் ஆய்வில் இரும்பு, செம்பால் ஆன பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல துறை அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று  வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா. சரவணன் ஆகியோர் அண்மையில் காளையார் கோவிலில் தமிழ் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாண்டியன் கோட்டை தொல்லியல் மேடுப்பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் ஏராளமான பழங்ககால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, “காளையார் கோவில் மையப்பகுதியில் புறநானூற்றில் வேங்கை மார்பன் ஆட்சி செய்த கோட்டையை பாண்டியன் உக்கிர பெருவழுதி கைப்பற்றிய செய்தி பாடப்பட்டுள்ளது, இதற்கு சான்றாக 37 ஏக்கர் பரப்பளவில் இன்றைக்கும் பாண்டியன் கோட்டை பழமையான மண்மேடாக வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. இதைச் சுற்றி அகழி, நடுப்பகுதியில் நீராவி குளம் ஆகியவை உள்ளன. மேலும் கிழக்குப் பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோவில், தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் ஆகியன இன்றும் மக்கள் வழிபடும் இடங்களாக உள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் இதைச் சுற்றியுள்ள நகர் பகுதியில் மழைநீர் வடியாததால் நடுவில் உள்ள நீராவிக் குளத்தின் இரண்டு பக்கங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்க கால்வாய் தோண்டப்பட்டது. அப்போது முதல் அந்த பகுதியில் பழமையான பொருள்கள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. குறிப்பாக சங்க கால செங்கல் எச்சங்கள், மேற்கூரை ஓடு எச்சங்கள், மேற்கூரை ஓடு எச்சங்களில் துளையிடப்பட்ட ஓடுகள், வட்டச் சில்லுகள், எடைக் கற்கள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், எலும்பினால் செய்யப்பட்ட கருவி முனைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேற்பரப்பு கள ஆய்வில் தொடர்ச்சியாக பழமையான பொருள்கள் கிடைத்து வருகின்றன. எனவே, இந்த இடத்தில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என சிவகங்கை தொல்நடை குழுவின் சார்பில், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு செய்தனர், பின்னர் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு நடத்தப்படும் என கடிதம் மூலம் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காலத்தால் எழுத்துக்களுக்கு முற்பட்டவை குறியீடுகள் என்பது பொதுக்கருத்து. அவ்வாறான குறியீடுகள் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் மோசிதபன், கூட்டம் என எழுதப்பட்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. பளிங்குக் கல்லாலான கண்ணாடியைப் போன்ற பாசி மணி ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது, இம்மணியின் நடுவில் கோர்க்க நேர்த்தியாக துளையிடப்பட்டு வட்ட வடிவில் தட்டையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று செம்பினால் கைப்பிடி செய்யப்பட்டு உள்ளே இரும்பு நுழைக்கப்பட்ட வேலைப்பாடுடைய பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது. இது சிறிய வடிவிலான இரும்பால் செய்யப்பட்ட கத்தி அல்லது குறுவாள் என ஏதாவது ஒரு பொருளாக இருக்கலாம். ஆனாலும் இரும்பும் செம்பும் பன்னெடுங்காலமாக நமது பயன்பாட்டில் இருப்பதை இவ்வாறான தொன்மையான பொருள்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன” என்று புலவர் கா.காளிராசா கூறினார்.