2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா தனி விமானம் மூலம் இன்று மாலை இந்தியா அழைத்துவரப்பட்டார்.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ராணா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்திய புலனாய்வு அமைப்பினர் அவரை இந்தியா கொண்டு வந்துள்ளனர்.

டெல்லி அழைத்து வரப்பட்ட ராணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு திஹார் ஜெயிலில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய நேரப்படி புதனன்று காலை 11:45 மணிக்கு பிளோரிடாவின் மியாமி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனி விமானம் இரவு 9:30 மணிக்கு ரோமானியா நாட்டின் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
11 மணி நேரம் ரோமானியா நாட்டில் நிறுத்திவைக்கப்பட்ட விமானம் பின்னர் இன்று காலை 8:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டது.
தஹாவூர் ராணா அழைத்துவரப்பட்ட கல்ப்ஸ்ட்ரீம் G550 ஜெட் விமானம் 19 இருக்கைகள், 9 திவான்கள் மற்றும் 6 படுக்கைகளைக் கொண்ட ஒரு சொகுசு விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட இருக்கும் ராணாவிடம் முதலில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.