சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வரும் பிளஸ்2 மாணவர் ஒருவர், சக மாணவர்களின் கிண்டலால் மனம் உடைந்து குடியிருப்பு கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கிஷோர் (17 வயது). இவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். கிஷோர் நேற்று மாலை தனது வீடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, கிஷோர் தனது பெற்றோரிடம் போனில் பேசியதாகவும், அப்போது சக மாணவர்கள் தன்னை உருவ கேலி கிண்டல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது மகனை உருவகேலி செய்வது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மாணவர் கிஷோர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.