சென்னை பாமகவுக்கு நானே தலைவர் என்று அறிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் பதவியில் இருந்து  மகன் அன்புமணியை நீக்கி அறிவித்து உள்ளார். இது பாமகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது

பாமகவில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினர் மீதான நடவடிக்கை மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வதில், மருத்தவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதலானது,  கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பா.ம.க. கூட்ட மேடையிலேயே எதிரொலித்தது.

 இதனை தொடர்ந்து பா.ம.க. நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இனி பா.ம.க. தலைவர் நான்தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் வழிநடத்தவே இந்த முடிவு எடுத்தாகவும்,  அதனால்,  பா.ம.க. தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாகவும், பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய ராமதாஸ், பாமக தலைவரான தான் பொறுப்பேற்பதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும்,  எல்லாவற்றையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது என்று கூறியதுடன்,  கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளை அழைத்து முடிவு எடுப்போம் என்று கூறினார்.

 இது நான் ஆரம்பித்த கட்சி. எனவே பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக்கொள்கிறேன். பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். கௌரவத் தலைவராக ஜி.கே.மணியை நியமிக்கிறேன். மே 11-ந்தேதி நடைபெற உள்ள வன்னியர் மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக அமையும். இதற்கான பொறுப்பை அன்புமணி கவனித்துக்கொள்வார்.

கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் கட்சி நிர்வாகிகளை அழைத்துப்பேசி முடிவெடுக்கப்படும் என்றுகூறி பனையூர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் என்னை சந்திக்கலாம் என்று தெரிவித்தார்.

இதனிடையே, மாநிலங்களவையில் நீட் குறித்து கேள்வி எழுப்பாதது குறித்து அன்புமணியே பதிலளிப்பார் என்று கூறினார். மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு இப்போதுதான் தலைவராகி இருக்கிறேன் என்றார்.

முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக பொதுக்குழுவிலும் ராமதாசுக்கும், அவரது மகனுக்கும் இடையே இருந்த மோதல் வெட்ட வெளிச்சமானது. மேடையிலேயே இருவரும் மோதிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த மோதலை சில தலைவர்கள் சேர்ந்து, இரு தரப்பிடம் பேசி  சமாதானம் செய்யப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இன்னும் புகைச்சல் அடங்காமல் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், இன்று அது பூகம்பமாக வெடித்துள்ளது.

இந்த மோதலுக்கான முக்கிய காரணம் என்ன என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாமக கட்சி தொடங்கிய ராமதாஸ் தனது குடும்பத்தினர் யாரும் அதிகாரத்துக்கு வர மாட்டார்கள் என கூறினார். ஆனால், வாக்குறுதியை மீறி தனது மகனான அன்புமணியை அதிகாரத்துக்கு கொண்டு வந்தார். இதுவே பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து,   பாமகவின் இளைஞரணி தலைவராக அன்புமணியை டாக்டர் ராமதாஸ் கொண்டு வந்ததுடன், அவருக்கு, எம்.பி பதவி,  மத்திய அமைச்சர், பாமக தலைவர் என அதிகாரமிக்க அனைத்து பொறுப்புகளை வாங்கிக்கொடுத்தார்.

இதனால் கட்சியினரிடையே பிரபலமான அன்புமணிக்கு ராமதாஸ் கட்சியின் தலைவர் பதவி, அதாவது  பாமகவின் கட்சி தலைவர் பதவியை வழங்கியதுடன், தான் கட்சியின் நிறுவனராக இருப்பதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் நியமனத்தில் இருவருக்கும் இடையே மோதல் போக்கு  ஏற்பட்டு வந்து.  ராமதாசின் ஆலோசனைகளை கேட்காமல் அன்புமணி தன்னிச்சையாக செயல்படுவதாக கூறப்படுகிறது. உச்சபட்சமாக, பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தன் என்பவரை டாக்டர் ராமதாஸ் நியமித்ததை, பாமக தாலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ்  கடுமையாக எதிர்த்தார். இதன் காரணமாக  அப்பா-மகன் மோதல் பகிரங்கமாக வெடித்தது.

பாமகவின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் என்பவர்,  அன்புமணியின் சொந்த அக்காள் மகன் தான். இருந்தாலும், இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தது பேசும்பொருளாக மாறியது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,  முகுந்தனுக்கு அரசியல் அனுபவம் இல்லை , கட்சியில் சேர்ந்து 4 மாசம்தான் ஆகுது, குடும்ப உறுப்பினர்களுக்கே மீண்டும் மீண்டும் பதவியா? அனுபவம் உள்ளவர்களுக்கு கொடுக்கலாமே என்று கூறியிருந்தார்.

அன்புமணியின் பேச்சால் ஆத்திரமடைந்த ராமதாஸ், “கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். எனவே முடிவை நான்தான் எடுப்பேன்” என மேடையிலேயே அன்புமணியிடம் காட்டமாக கூறினார்.

அன்புமணி உடனே எழுந்து, “என்னை சந்திக்க நினைப்போர், இனி பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம்” என சொல்லி எழுந்துச் சென்றார். இதனை தொடர்ந்து, நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து சமாதானம் செய்ததாக தகவல் வெளியானது. இருப்பினும் இருவருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்வதாக கூறப்பட்டு வந்தது.

இதுமட்டுமின்றி, அன்புமணி தனது மனைவி சவுமியா கட்சிக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது ராமதாசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே 2024 பாராளுமன்ற தேர்தலில்போது தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் சவுமியா போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், அவருக்கு கட்சியின் பதவி வழங்க அன்புமணி விரும்பியதாகவும், அதற்கு ராமதா1 முட்டுக்கட்டை போட்டதாகவும், இதனால், அன்புமணிக்கு ராமதாஸ் மீது மேலும் கோபம் ஏஎற்பட்டதாக கூறப்படகிறது.

இதுமட்டுமின்றி, அன்புமணி கூட்டணி கட்சி தலைவர்களை தன்னிச்சையாக சந்தித்து வருவதும், கூட்டணி குறித்து பேசி வருவதும் ராமதாசுக்கு அவர்மீதான நம்பிக்கையை சீர் குலைத்தது.  மேலும், பாமக தலைமை அலுவலகத்தை தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு மாற்றியதும் ராமதாசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில்தான், இளைஞரணி தலைவர் விவகாரத்தில் மோதல் வெடித்தது. அன்புமணி  பாமகவின் இளைஞரணி தலைவராக ஏ.கே. மூர்த்தியின் சிபாரிசுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நபரை நியமிக்க விரும்பிய நிலையில், அதை ஏற்க   ராமதாஸ் மறுத்த நிலையில், இவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்சி தலைவர் என்கிற முறையில் எனக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவரை நியமிக்கக்கூட அதிகாரம் இல்லையா? என்று அன்புமணி ராமதாசிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.  தான் கூறுவதை மகன் அன்புமணி ஏற்க மறுப்பதாக ராமதாஸ் விரக்தியுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியே இன்று, பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டு, கட்சி தலைவர் பதவியை ராமதாஸ் எடுத்துக்கொண்டுள்ளார்.