பிரபல தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி காயமடைந்தார்.
இந்த தீ விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் 16 குழந்தைகள் மற்றும் 6 முதியவர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் 7 வயதான மார்க் சங்கருக்கு கைகள், கால்கள் மற்றும் நுரையீரல் (புகையை சுவாசித்ததால்) காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சூடான வாயுக்கள், புகை அல்லது ரசாயனங்களை உள்ளிழுப்பதால் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களுக்கு ஏற்படும் சேதமான உள்ளிழுக்கும் காயம், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடையே மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
மேலும், இதனால் நிமோனியா மற்றும் தோல் காயங்களும் ஏற்படுகிறது.
இதையடுத்து மார்க் சங்கரின் மூச்சுக் குழாயில் சிக்கியுள்ள அந்நிய பொருட்கள் குறித்து ஆய்வு செய்யவும் அதை வெளியேற்றவும் அவருக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள பவன் கல்யாண், இந்த பரிசோதனை மயக்க மருந்து கொடுத்து நடத்தப்பட்டதாகவும் இதன் நாள்பட்ட பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து கவலையடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேவேளையில், பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் குறித்து சமூக வலைதளத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிளவிலான தேடுதல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.
சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து : பவன் கல்யாணின் மகன் காயம்