சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மது சப்ளை செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்த நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற, lடாஸ்மாக் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை சென்னை உயர் நீதிமன்றம் அதிரயாக அனுமதி வழங்கி உள்ளது.
முன்னதாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அரசு அனுமதியின்றி டாஸ்மாக் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கூறி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நடத்திய நீதிபதிகள் செந்தில்குமார் அமர்வு, அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், அமலாக்கத்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். நீதிபதியின் இந்த நடவடிககை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்கள் இந்த வழக்கில் இருந்து விலகிய நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் வழக்கை விசாரித்ததுடன், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனர். விசாரணையின்போது, அமலாக்கத்துறை சோதனையில் அரசு அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி வாதிட்டார். ஆனால், அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டதுடன், வழக்கு விசாரணை ஏப்ரல் 9ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில், டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கும் நேற்றும் விசாரணைக்கு வந்தது.
முன்னதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஏற்கனவே அறிவித்தபடி டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரிணைக்கு எடுத்த நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு ஆஜரான தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேணடும்,” என கோரிக்கை வைக்கபட்டது.
அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், “வழக்கு விசாரணைக்கு வந்த போதே உச்சநீதிமன்றம் செல்வதாக கூறியிருந்தால் வழக்கை நாங்கள் இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியிலிட்டிருக்க மாட்டோம். இதன் மூலம் நீங்கள் நீதிமன்றத்தை இழிவுபடுத்தி உள்ளீர்கள். குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நேர்மையாக இருக்க வேண்டும். இந்த மனு பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக தாக்கல் செய்யபட்டதா?,” என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழ்நாடு அரசின் உரிமைக்காகவே மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு தாக்கல் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது,” என தெரிவிக்கபட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால் பிற்பகலில் தமிழ்நாடு அரசு வாதங்களை முன் வைக்கலாம்,” என்றனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்க மறுத்ததுடன், “இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே முடிவு செய்யலாம்,” என்று நீதிபதிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு கூறியது.
இதையடுத்து வழக்கு மீண்டும் பிற்பகல் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. உயர் நீதிமன்றத்தில் ஆஜரான தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர், “அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழக அரசின் வழக்கை தொடர்ந்து நடத்துவதா? திரும்ப பெறுவதா? என்பது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு தற்போது அமலில் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள் வாய்மொழி உத்தரவுகள் எதையும் நீதிமன்றம் பின்பற்றாது எனவும், அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என்றும் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.