புதுச்சேரி, காரைக்கால், திருவேட்டக்குடி, திருமேனி அழகர் கோவில்,

தல வரலாறு
கோயில் அமைந்துள்ள பகுதி ‘கோயில் மேடு ‘ என்றழைக்கப்படுகிறது.
அருச்சுனன் வந்து தவஞ்செய்ய, இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அருள் செய்ததாகப் புராண வரலாறு சொல்கிறது.
இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.
தலப்பெயர்க் காரணம்: பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான். அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. அருச்சுனன் தவம் செய்த சமயம் இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அர்ச்சுனனுக்கு அருள் செய்ததாக புராண வரலாறு சொல்கிறது. இறைவன் வேட வடிவத்தில் தோன்றியதால் இத்தலம் திருவேட்டக்குடி என்று பெயர் பெற்றது.
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தில் சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் ஒரு விசாலமான மண்டபம். அதில செப்புக் கவசமிட்ட கொடிமரம், முன்னால் கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது தென்மேற்குச் சுற்றில் சுந்தர விநாயகர் சந்நிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் புன்னை வனநாதர் சந்நிதி, மகாலட்சுமி சந்நிதி ஆகியவை உள்ளன. சம்பந்தருக்கும் சனி சந்நிதி உள்ளது.
கருவறை பிரகாரத்தில் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளும், கோஷ்ட மூர்த்திகளாக தட்சினாமூர்த்தி, துர்க்கை ஆகியோரும் உள்ளனர். சிவன் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ஜுனர், கையில் சூலம், வில்லை வைத்துக்கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக இருக்கிறார். விழாக்காலங்களில் இவருக்கும் பூஜைகள் நடக்கிறது.
அம்பாள் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை “சாந்தநாயகி” என அழைக்கின்றனர். உற்சவத் திருமேனிகளில் வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய வேடரூபர், வேடநாயகி திருமேனிகள் சிறப்பானைவை. வேடரூபர் கையில் வில்லேந்திக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.
கடலாடு விழா: மாசிமக தினத்தன்று திருமேனியழகரான சுவாமி வேட மூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடும் வைபவம் கடலாடு விழா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் மீனவப் பெண்ணாக வந்து அவதரித்தாக புராண வரலாறு கூறுவதால், இந்த கடலாடு விழாவை திருவேட்டக்குடி தலத்திற்கு அருகிலுள்ள கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள். மாசிமகத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள தேவதீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.
சிறப்புகள்
வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய (வேடரூபர், வேடநாயகி) திருமேனிகள் சிறப்பானவை; வேடரூபர், கையில் வில்லேந்திக் கம்பீரமாக காட்சித் தருகிறார்.
ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருமேனியழகரான சுவாம வேடமூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடுகிறார்; இது “கடலாடுவிழா” என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் வந்து அவதரித்ததாகப் புராண வரலாறு கூறுவதால் இக்’கடலாடு விழா ‘வை கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள்.
மாசிமகத்தில் இக்கோயில் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.