சென்னை: பாராளுமன்றத் தொகுதி மறுவரையறையை தள்ளி வைக்க வலியுறுத்தும் வகையில்,  பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகவும்,   25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் வகையில்,    பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு  முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மக்கள் தொக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரை செய்யப்பட உள்ளது. அதன்படி வரும் 2026ம் ஆண்டு மீண்டும் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. அதனால்,   பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட -நியாயமான தொகுதி மறுசீரமைப்பைப் பெற்றிட தமிழ்நாட்டு எம்.பி.க்களுடன்  முதலமைச்சர் ஸ்டாலின்  இந்தியப் பிரதமர் அவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதி உள்ளார்.

தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், தமிழ்நாடு உள்பட சில மாவட்டங்களின் தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதால், 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மார்ச் 22ந்தேதி கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்களும், கர்நாடக மாநில துணைமுதல்வர் உள்பட சில கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்த  கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இதுகுறித்து கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பிரதமரை சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், இதுகுறித்து,   பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்று பேரவையில் முதல்வர் தெரிவித்த நிலையில்,  பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் இன்று கடிதம் அனுப்பப்படுகிறது.

பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரம் வெளிநாடு செல்ல இருப்பதால் அதற்கு முன்னதாகவே  அவரை சந்திப்பதற்கு அனுமதி கோரப்பட்டு உள்ளது.