சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை திறந்து வைத்தார்.

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர். அவர் 1902 முதல் 1928 வரை இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குநர் ஜெனரலாக இருந்தார். சிந்து சமவெளி நாகரிகத்தை உள்ளடக்கிய இரண்டு முக்கிய நகரங்களான ஹரப்பா மற்றும் மொஹெஞ்சதாரோவின் அகழ்வாராய்ச்சிகளை அவர் மேற்பார்வையிட்டார். இது தொடர்பான ஆய்வறிக்கையை 20 செப்டம்பர் 1924இல் வெளியிட்டார்.
மார்ஷல் இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து வள மோதல்களில் ஈடுபட்டார், ஏனெனில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் உணர்ந்தார். அவரது, ஆய்வு விவரங்கள், செப்டம்பர் 20, 1924 அன்று இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸில் வெளியிடப்பட்டன.
இந்த அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது என்பதை உலகுக்கு அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி நூறு ஆண்டுகள் ஆவதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலை கவுரப்படுத்தும் வகையில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
[youtube-feed feed=1]