சென்னை: சென்னை மாநகர ஏசி பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளில் பயணம் செய்யும், ரூ.2000 மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஏற்கனவே ரூ.1000 மாதாந்திர போக்குவரத்து பயண அட்டை புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது ரூ.2000 மாதாந்திர பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்தில், இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய ரூ.2000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டையை பயனர்களுக்கு வழங்கி அமைச்சர் சிவங்கர் தொடங்கி வைத்தார்.
இந்த பயண அட்டை வைத்துள்ளவர்கள், குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் விருப்பம்போல பயணம் செய்யலாம்.
இந்த நிகழ்ச்சயில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், இ.ஆ.ப., இணை மேலாண் இயக்குநர், தலைமை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள, ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.