சென்னை: தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், 10, 11,12வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது.  11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது., அதிகரித்து வரும் வெப்ப நிலையை கருத்தில்கொண்டு, உயர்நிலை மற்றும் தொடக்க பள்ளி மாணவர்களுக்கும் முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி,  1 முதல் 9-ம் வகுப்புக்கு திருத்தப்பட்ட விரிவான தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை  வெளியிட்டுள்ளது. அதில்,  6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள், ஏப்ரல் 8 முதல் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-ம் பருவத்தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி, 21-ம் தேதி வரையும், 1, 2, 3-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 15-ல் தொடங்கி 21-ம் தேதி வரையும் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கால அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து வித பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.