சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மாநிலம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாள்கள் வரை சரண் செய்து பணம் பெறலாம். இந்த நடைமுறை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக்குவதற்காக ஒப்படைத்துவிடலாம், விதிகளின்படி வருடத்திற்கு 15 நாட்கள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 30 நாட்கள் என அனுமதிக்கப்படுகிறது, இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. , இதை மீண்டும் வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் போராடி வந்த நிலையில், தற்போது ஈட்டிய விடுப்பு 15 நாள்கள் வரை சரண் செய்து பணம் பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

‘தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் அமர்வு இன்று காலை தொடங்கியது. முதல்நாள் அமர்வான இன்று வழக்கமான நடைமுறைகளுடன் அவை தொடங்கியதும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 2025-26ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார். திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் விவரம் வருமாறு:-
அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாள்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயலாக்கம் அமல்படுத்தப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறும் முறை மீண்டும் செயல்படுத்தப்படும். அதன்படி, அரசு ஊழியர்கள் 15 நாட்கள் விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறலாம். சரண்டர் விடுப்பு மீண்டும் வழங்குவதன் மூலம் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர்.
நகர்ப்புரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யப் ரூ.75 கோடியில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
பத்து இலட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு. இது அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டு வரும்.
20லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவர்களின் விருப்பத்திற்கேற்ப மடிக்கணினி அல்லது கையடக்க கணினி வழங்க நடவடிக்கை-
தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் 50,000 குழந்தைகள் 18 வயது வரையில் இடைநிற்றல் இன்றி பள்ளிப்படிப்பை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும்.
கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். *பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 40,000 பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்.
சேலம், கடலூர், நெல்லையில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும்.
போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக்கூடம் வசதிகளடன கட்டப்பப்படும்.
தமிழ்நாட்டில் மேலும் பல செஸ் சாம்பியன்களை உருவாக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டை சேர்த்திட, உடற்கல்விப் பாடத்திட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில், செயற்கை நுண்ணறிவு (AI) இணையப் பாதுகாப்பு (Cyber Security) உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்.
2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
பள்ளி பாடத்திட்டத்தில் செஸ்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு.
மூத்த குடிமக்களுக்கான ரூ.10 கோடியில் அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்.
தமிழக பட்ஜெட்டில் இளைஞர் நலன், விளையாட்டு துறைக்கு ரூ.572 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித் துறைக்கான அறிவிப்பு:
பேராசிரியர் அன்பழகன் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடும் பொருட்டு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2025-26 ஆம் ஆண்டில் 2,000 பள்ளிகளுக்கு 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வரும் பள்ளிகளில் உள்ள 880 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். மேலும், அரசுப் பள்ளிகளில், 2025-26 ஆம் ஆண்டில் 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
2025-26 ஆம் ஆண்டில் 1,721 முதுகலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கான தேர்வு அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும். அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வும், சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில், 780 அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLU) உள்ளிட்ட, நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சிறப்பிடம் பெற்று சேர்க்கை பெற்றுள்ளனர். மேலும், 12 மாணவர்கள் முழுக் கல்வி உதவித்தொகையுடன் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருகின்றனர்.
உயர்கல்வி குறித்தான விழிப்புணர்வு
மாநிலத்தின் அனைத்து 388 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்தான விழிப்புணர்வு மற்றும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், இந்த 500 அரசுப் பள்ளிகள் மட்டுமன்றி, அருகில் அமைந்திருக்கும் இதர அரசுப் பள்ளி மாணவர்களும் பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திடும் ஒரு லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் முதற்கட்டத்தில் பயனடைவார்கள்.
நான் முதல்வன்-கல்லூரிக் கனவு திட்டத்தின் மூலம், குறைந்தது 2,000 அரசுப் பள்ளி மாணவர்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி தொடுவார்கள் என நிறுவனங்களில் சேர்ந்து சிகரம் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கென 50 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது.
பள்ளிக்கல்வித் திட்டங்கள்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’, மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து சென்றிட போக்குவரத்துப்படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கிடும் உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித் திறன்கள் மிளிர்ந்திட கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவரின் கல்வி நலன் சார்ந்து தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.
தரம் உயர்த்தப்படும் பள்ளிகள்
மாணவர்கள் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே உயர்கல்வியை தொடர்ந்து பயின்றிட அரசு தொடர்முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை
உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப் பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
தென் தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழ்ந்திடும் மதுரை மாநகரில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு, இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருச்சியில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவைப் பரவலாக்கிடும் முயற்சிகளின் அடுத்த கட்டமாக, சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் பொதுமக்கள், போட்டித் தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக தலா 1 லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டு கூட வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்படும்.
நான் முதல்வன்
நான் முதல்வன் திட்டம் உலகை வெல்லும் இளைஞர்களைத் தமிழ் மண்ணில் படைக்கும் உயரிய நோக்கம் கொண்டது. நாட்டின் பிற மாநிலங்களும் பின்பற்ற விழையும் இத்திட்டத்தில் இதுவரை சுமார் 41.38 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், 1 லட்சம் ஆசிரியர்களுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 1.04 லட்சம் மாணவர்கள் இதுவரை வேலைவாய்ப்பினை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திட, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு, மாதம் 7,500 ரூபாயும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 25,000 ரூபாயும், இதைத் தொடர்ந்து, ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்குத் தயாராகும் இளைஞர்களுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.