சென்னை;  தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக மார்ச் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக, காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தனர். இப்படியாக பல்வேறு முறைகேடுகளை செய்து மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற நினைப்பதாக அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்து இருந்தார். இதனை ஏற்க மறுத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், ‘மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் தகவலானது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பின்பற்றப்படும் முறையின் காரணமாக வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் ஒதுக்கப்படுவதாக விளக்கம் அளித்தது.

மேலும், ‘வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்கள் இருந்தாலும், தொகுதி மற்றும் வாக்கு சாவடி வேறுபட்டிருக்கும் என்பதால் அதை முறைகேடு என கூற முடியாது’ என்றும் கூறியது.

இதனை ஏற்க மறுத்த திரிணாமுல், காங்கிரஸ் கட்சிகள், ‘தேர்தல் ஆணையம் செய்த தவறை மறைக்க பார்க்கிறது’ என, தெரிவித்தன. ஆனாலும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது புகார் கூறி வருகின்றன.

இந்த நிலையில் தேர்தல் நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த யோசனைகளை தெரிவிக்கலாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனைத்துக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் மார்ச் 18 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளான திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, சிபிஐ மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் மேம்படுத்த வேண்டிய அம்சம் குறித்தும், வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம், சேர்ப்பு மற்றும் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.