சென்னை: தமிழர் வடிவமைத்த, இந்தியாவின் ரூபாய் குறியீடு ( ‘₹’ )  மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு லோகோ வெளியிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர்,  உங்களால் எப்படி முட்டாளாக இருக்க முடிகிறது  என கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான லோகோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ரூபாய் என்பதற்கான இந்திய குறியீடு ‘₹’  என்பதற்கு பதிலாக ரூ என்ற எழுத்துடன் 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியா ரூபாயின் குறியீடுக்கு பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்.

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘₹’ குறியீடு  இந்தியா முழுமைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது.

இந்த குறியீட்டை,  வடிவமைத்தவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உதயகுமார்- தற்போது அந்த குறியீடு மாற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,  தமிழக அரசு பட்ஜெட்டுக்கான லோகோவில் ரூபாய்க்கான குறியீடை நீக்கி விட்டு, ரூ என வெளியிட்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது. * ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உதயகுமார் என்பவர் வடிவமைத்த குறியீடு மாற்றப்பட்டுள்ளது.  உங்களால் எப்படி முட்டாளாக இருக்க முடிகிறது மு.க.ஸ்டாலின் அவர்களே?

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அத்துடன் திமுக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்திய  ரூபாய் குறியீட்டை பயன்படுத்தி இருப்பதையும்,  தற்போது அதை மாற்றி பதிவிட்டிருப்பதையும் சுட்டிகாட்டி படத்துடன் பதிவிட்டு உள்ளார்.

இந்திய ரூபாய்க் குறியீடு (₹) என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ நாணயமான இந்திய ரூபாயின் பணக் குறியீடு ஆகும்.