சென்னை

மிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு  நிலங்கள் கையகப்ப்டுத்துவதில் தாமதம் ஏற்படவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது

மத்திய அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக அரசை குற்றம்சாட்டி பேசினார்.

தமிழக அரசு இதற்கு விளக்கம் அளித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

”கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தமிழகத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த ரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில்வே திட்டங்களுக்கு தமிழகத்தில் மொத்தம் 2,197.02 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த ஏற்கனவே தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முக்கியமான 17 ரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1,253.11 ஹெக்டேர் நிலங்களில், 1,144.84 ஹெக்டேர் நிலங்களுக்கான நில எடுப்பு பணிகள் முடிவுற்று (அதாவது 91 சதவீதம்) ரயில்வே நிர்வாகத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான ரயில்வே திட்டங்களுக்கான நிலங்கள் 100 சதவீதம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. எஞ்சிய நில எடுப்பு பணிகளை விரைந்து முடிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை-திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்கு 229.23 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த 2011-ம் ஆண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டும் ரெயில்வே துறையால் நிதி ஒதுக்கப்படாததால் அந்த பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழியாக) புதிய அகல ரயில்பாதை 2-ம் கட்ட திட்டத்திற்காக 702.30 ஹெக்டேர் நிலங்களுக்கு நிர்வாக அனுமதி கடந்த 2023-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதுபோன்று பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்த மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படவில்லை. ரயில்பாதை அமையவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை பொறுத்தவரையில், மேற்படி திட்டங்களை செயல்படுத்த எந்தவிதமான தடைகளும் இன்றி அவ்வப்போது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு அரசு நிலங்கள் ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரெயில்வே துறையின் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் தமிழக அரசின் வருவாய் துறையால் தாமதம் எதுவுமில்லை.

என்று கூறப்பட்டுள்ளது.