ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா வரும் 14 மற்றும் 15ந்தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இநத் கோவில் கொடியேற்றம் நாளை (மார்ச் 14ந்தேதி) நடைபெறுகிறது.
இந்திய – இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நடப்பாண்டு மார்ச் 14, மார்ச் 15 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறு கிறது. திருவிழாவில் இந்திய – இலங்கை பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சத்தீவு என்பது, ராமேசுவரம், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியாகும். இது, ராமேசுவரம் பகுதியில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.
இந்த ஆலய திருவிழா வழக்கமாக, பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15ந்தேதி நடைபெறும், என இலங்கையில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் அறிவித்துள்ளார். அதில், கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில், இந்தியாவில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, நாளை மறுதினம், அதாவது மார்ச் 14-ந்தேதி மாலை ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி சிலுவை பாதை திருப்பலியும், அன்று இரவு திருவிழா திருப்பலியும் நடக்கிறது. இரவு 9 மணி அளவில் அந்தோணியார் தேர் பவனி நடைபெறுகிறது. மறுநாள் (மார்ச் 15-ந்தேதி) காலை 7 மணி அளவில் திருவிழா திருப்பலி தொடங்குகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த பிரார்த்தனையில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்களும், இருநாட்டு பங்குத்தந்தைகளும் கலந்து கொள்வார்கள். இ
இந்த ஆண்டு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் , ராமேசுவரம் பங்குத்தந்தை அசோக் வினோவிற்கு அனுப்பிய அழைப்பிதழை ஏற்று, ராமேசுவரத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 2,720 ஆண்கள், 652 பெண்கள், 56 ஆண் குழந்தைகள், 36 பெண் குழந்தைகள் என மொத்தம் 3,464 பேர் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
கச்சத்தீவு திருவிழாவிற்கு ராமேசுவரத்திலிருந்து செல்வதற்கு 79 விசைப்படகுகள் மற்றும் 23 நாட்டுப் படகுகளில் செல்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு செல்பவர்களுக்கு இன்று,. மார்ச் 13 (வியாழக்கிழமை) படகு உரிமையாளர்கள் மூலம் பயண அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
மார்ச் 14 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6 மணியிலிருந்து ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் சுங்கத் துறையின் சோதனைக்கு பிறகு படகுகள் கச்சத்தீவிற்கு புறப்பட ஆரம்பிக்கும். மறுநாள் மார்ச் 15 சனிக்கிழமை திருவிழா முடிந்த பின்னர் காலை 10 மணிக்கு கச்சத்தீவில் இருந்து புறப்பட்டு அனைத்து விசைப்படகுகளும் மாலை 5 மணிக்குள் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்தை வந்தடையும்.
மேலும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்ளும் இந்திய-இலங்கை இருநாட்டு பக்தர்களும் உணவு, தண்ணீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் யாழ்பாணம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்நாட்டு கடற்படையின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு வருபவர்கள் மதுபானங்களை எடுத்து வரவோ, மது அருந்தி விட்டு வரவோ, புகைப்பிடிக்கவோ, தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரவோ அனுமதி கிடையாது. லேப் டாப், கணினி மற்றும் காமிரா உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுத்து வருவதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது.
கச்சத்தீவில் உணவு சமைக்கவோ, சேலை, கைலி, துணி வகைகள், சோப்பு, எண்ணெய் போன்றவைகள் வியாபாரம் மற்றும் பண்டமாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.