மத்திய அரசின் தொகுதி மறுவரையரை நடவடிக்கையை விமர்சித்து வரும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அடுத்த முயற்சியாக தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக்கை வரும் மார்ச் 26 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நவீன் பட்நாயக்கை ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்த மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக அவரை அழைத்தனர்.
தமிழ்நாடு, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்கள் இந்த தொகுதி மறுவரையறையால் நேரடியாகப் பாதிக்கப்படும் என்று நவீன் பட்நாயக்கைச் சந்தித்த திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறினார்.
இந்த விவகாரத்தில் மாநில கட்சிகளின் ஆதரவைப் பெறவும் அவர்களை ஒன்றிணைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
“தொகுதி மறுவரையால் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஒடிசா பெற வேண்டிய விகிதாசாரம் பாதிக்கப்படும். இருப்பினும், தொகுதி மறுசீரமைப்பின் நன்மை தீமைகள் மற்றும் அது ஒடிசாவை எவ்வாறு பாதிக்கும் என்பதை பகுப்பாய்வு செய்ய இது தொடர்பான கட்சிக் கூட்டம் விரைவில் புவனேஸ்வரில் நடைபெறும்” என்று கூட்டத்திற்குப் பிறகு பிஜேடி மூத்த தலைவர் சஞ்சய் தாஸ்பர்மா கூறினார்.