சென்னை; சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, குடியரசு தலைவர் முர்மு, பாரத பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் வாழ்த்து  தெரிவித்து உள்ளனர். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம்  முழுவதும் மார்ச் 8 ந்தேதி  சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் உலகளவில் கொண்டாடப்படுகிறது. இது பாலின சமத்துவத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பையும் குறிக்கிறது.

. இதையொட்டி,  இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பாரத பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி,  தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட இந்திய மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பெண்களுக்கு தங்களது வாழ்த்துக்ளை தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர்  திரவுபதி முர்மு  வெளியிட்டுள்ள பதிவில்,  அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண் சக்தியின் சாதனைகள் மற்றும் நாட்டுக்கும், சமூகத்திற்கும் அவர்கள் தனித்துவ பங்காற்றியதற்காகவும் பெண்களை கவுரவிக்கும் நிகழ்வாக சர்வதேச மகளிர் தினம் உள்ளது.

நம்முடைய குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு பெண்களே அடித்தளம் ஆக இருக்கிறார்கள். இன்னல்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டபோதும் பல்வேறு துறைகளில் தங்களுடைய அடையாளங்களை அவர்கள் பதித்து வெற்றி கண்டுள்ளனர். எனினும், பெண்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்த நிறைய விஷயங்களைச் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் வகையில் மற்றும் சம வாய்ப்புகளைப் பெறும் வகையிலான சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என நாம் அனைவரும் உறுதியேற்போம். சாதனை படைத்த அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு சிறந்த வருங்காலம் அமைவதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி வீடியோ இணைத்து வெளியிட்டுள்ள பதிவில்,  உலக மகளிர் தினத்தில் நமது பெண் சக்திக்கு தலைவணங்குவோம். நமது அரசு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுள்ளது எனது சமூக வலைதள கணக்குகளை பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்கள் கையாள்வார்கள் என்று தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையாள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,   இந்தியாவின் அனைத்து பெண்களுக்கும் #மகளிர் தின வாழ்த்துக்கள். நீங்கள் வலிமையிலிருந்து வலிமைக்கு வளரட்டும்.” பெண்கள் நமது சமூகத்தின் முதுகெலும்பு. அவர்களின் வலிமை, மீள்தன்மை மற்றும் குரல் நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.

இந்த சர்வதேச மகளிர் தினத்தில், ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்த விதியை வடிவமைக்கவும், ஒவ்வொரு கனவையும் துரத்தவும், அதிக உயரங்களுக்கு உயரவும் சுதந்திரம் பெறும் வரை அனைத்து தடைகளையும் உடைக்க உறுதிபூண்டு, உங்களுடன் மற்றும் உங்களுக்காக நான் நிற்கிறேன். காங்கிரஸ் எம்.பி. தனது ட்வீட்டுடன் பெண் சாதனையாளர்களின் படத்தொகுப்பையும் பகிர்ந்துள்ளார்.  தேசப்பிதா மகாத்மா காந்தி “பெண் ஆணுக்கு அளவிட முடியாத அளவுக்கு உயர்ந்தவள்” என்று கூறியதை மேற்கோள் காட்டினார். ராகுல் காந்தி, “வலிமை என்பது தார்மீக சக்தி என்றால், பெண் ஆணுக்கு அளவிட முடியாத அளவுக்கு உயர்ந்தவள்” என்று டிவீட் செய்துள்ளார்.

https://x.com/i/status/1898234283518788011

தமிழ்நாடு முதலமைச்சர் வீடியோ இணைத்து வெளியிட்டுள்ள பதிவில், அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மகளிருக்காக தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை பட்டியலிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.

https://x.com/i/status/1898199868855783828

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், அன்பை அள்ளிக் கொடுப்பதில் அன்னையாக, அறிவை அருளும் ஆசிரியையாக, பாசத்தோடு அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்த மனைவியாக, மகளாக, நட்பைக் காட்டும் தோழியாக, தர்மத்தைச் சொல்லும் பாட்டியாக என, வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள்தான் பெண்கள். தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர் தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம், இன்றைக்கு தமிழ்நாடு பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. சிறுமி முதல் மூதாட்டி வரை, எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் திராணியற்ற ஒரு ஆட்சியாக இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி இருப்பதும் வெட்கக்கேடானது. அன்புச் சகோதரிகளே- உங்களுக்காக, உங்கள் பாதுகாப்புக்காக என்றைக்கும் அ.தி.மு.க. போராடும். 2026ல் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், இன்று நீங்கள் அச்சத்துடன் இருக்கின்ற நிலை மாறி, மிகவும் பாதுகாப்புடன், சுதந்திரமாக செயல்பட்டு, பல சாதனைகளைப் புரிகின்ற காலமாக நம் ஆட்சிக்காலம் நிச்சயம் இருக்கும்! என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் சுதந்திரத்தையும், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளையும் அங்கீகரித்துப் போற்றவும், பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாட்டை ஒழிக்கவும், சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும், இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.