மதுரை: அரசியல் கட்சியினர் தங்களது கட்சி கொடிக் கம்பங்களை தங்கள் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என கூறிய உயர்நீதிமன்றம் அமர்வு, அரசியல் கட்சிகளின் சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.

மாநிலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் சாலையோரங்களிலும் மூலை முடுக்குகளிலும் அரசியல் கட்சிகளின் அறிவிப்பு பலகைகள், கொடி கம்பங்கள், சிலைகள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யப்பட்டு வருகிறது. இதனால்,   தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிடக் கோரி  பல முறை நீதிமன்றங்களில் வழக்கள் தொடரப்பட்டு உள்ளது. அதை விசாரித்த நீதிமன்றங்களும்,   அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும். சட்ட வரம்புக்கு உட்பட்டு மட்டுமே அரசியல் கட்சிகள் தங்களது கொடி கம்பங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும்,  . அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என்று  அறிவித்தது. ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஆண்டு வரை எந்தவொரு முறையான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில்,  சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிடக்கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற   தனி நீதிபதி இளந்திரையன் , பொது இடங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு நிலங்களில், தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் வைத்துள்ள, கொடிக்கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் சார்ந்த அனைத்து அமைப்புகளும், உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு, அதற்கான காலக்கெடுவும் அறிவித்தார்.

இதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு,   மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை  உறுதி செய்தது. தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று இரண்டு நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் தங்கள் அலுவலகங்களில் கொடிக் கம்பம், கட்சி கொடிகளை  பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்; சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.