டெல்லி:  டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே கூலித் தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என கூறினார்.

கும்பமேளாவின்போது டெல்லி ரயில்நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது  18 பேர் உயிழந்த நிலையில், டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு  உதவிய ரயில்வே கூலிகளை  ராகுல் காந்தி சந்தித்து, அவர்களுடன் உரையாடினார். மேலும், அவர்களக்கு தேவையான  உதவிகளை  செய்வதாக உறுதியளித்தார்.

ரயில் நிலையங்களில் கூட்ட மேலாண்மையை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ‘ஆவாஸ் பாரத் கி’ போர்டல் குறித்த பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் மக்களை வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் தனது  எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில் , சில நாட்களுக்கு முன்பு டெல்லி ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளர்களை மீண்டும் சந்தித்து பேசினேன். அப்போது அவர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பியதை தெரிவித்தனர். அப்போது 18 பேர் படுகாயம் அடைந்து இறந்தனர். நெருக்கடியான நேரங்களிலும் அவர்கள் பயணிகளுக்கு உதவுகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. சில நாட்களில் சாப்பிடுவதற்கு கூட பணம் கிடைப்பதில்லை என கூலித் தொழிலாளர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்து கூறினர். அவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்துவேன். அவர்களின் உரிமைகளுக்காக நான் முழு வீச்சில் போராடுவேன்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.