சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம், தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்டரங்களில் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப  நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன.  அடுத்த நாடாளுமன்ற தேர்தல் அதாவது, 2029 தேர்தலுக்கு முன்னதாக  இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மொத்த முள்ள   39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக  அஞ்சப்படுகிறது.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று காலை 10 மணி அளவில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10வது தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.


முன்னதாக இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்கபதாக அதிமுக, காங்கிரஸ், விசிக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் அறிவித்தன. அதேசமயம், பாஜக, நாம் தமிழா், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்,  கூட்டத்தில் அதிமுக, விசிக, பாமக, தவெக  உள்பட லெட்டர் பேடு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.

இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக ஒவ்வொரு கட்சியின் சாா்பிலும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட உள்ளது. இந்தக் கருத்துகளின் அடிப்படையில் அரசின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.