சிட்னி
ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகள் உயிரை காத்த ஸ்ரிசன் மரணம் அடைந்துள்ளார்.

தனது ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘தங்கக் கை மனிதர்’ (Man with the golden arm) என அறியப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார். இவர் தனது 18 வயதில் இருந்து 81 வயது வரை 1,173 முறை இவர் ரத்த தானம் செய்துள்ளார். இவரது பிளாஸ்மாவில் இருந்த Anti-D எனப்படும் அரியவகை ஆன்டிபாடி பிரவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் தீங்கு விளைவிக்கும் ஆன்டிபாடிகளை தடுக்க உதவி உள்ளது.
ஜேம்ஸ் ஹாரிசனுக்கு 14 வயதில், நடத்தப்பட்ட ஆபரேஷனின்போது, ஒரு நுரையீரல் அகற்றப்பட்டிருந்தது. இந்த ஆபரேஷனுக்காக, ஹாரிசனின் உடலில், முகம் தெரியாத பலர் அளித்த 13 யூனிட்கள் ரத்த தானம் மூலம் உயிர் பிழைத்தார். தான் உயிர் பிழைத்ததற்கு நன்றி கடனாக அப்போதே, ரத்த தானம் செய்வதில் விருப்பம் கொண்டிருந்தார்.
ஆஸ்திரேலியாவில், ரீசஸ் நோயினால் பச்சிளம் குழந்தைகள் அதிகம் மரணமடைந்து வந்தனர். இந்த நோய்க்கு தீர்வு ஏற்பட Anti-D என்ற ஆன்டிபாடி அவசியமானதாக கூறப்பட்டது. ஹாரிசனின் ரத்த பிளாஸ்மாவில், இந்த Anti-D ஆன்டிபாடி இருப்பது கண்டறியப்பட்டது. எனவே தனது 18 வயதில் இருந்து ரத்த தானம் செய்ய துவங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார், இவரது இந்த செயற்கரிய செயலின் மூலம், சுமார் 24 லட்சம் பச்சிளம் குழந்தைகளின் உயிரை அவர் காப்பாற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தனது 81 வயது வரை ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை ஜேம்ஸ் ஹாரிசன் இதனை செய்து வந்துள்ளார் கடந்த சில ஆண்டுகளாக ரத்த தானம் அளிப்பதை ஜேம்ஸ் ஹாரிசன் நிறுத்தினார். உடல் நலக்குறைவால் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த பிப். 17-ம் தேதியன்று தனது தூக்கத்திலேயே இயற்கை ஏய்தியதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.