சென்னை
நடிகை விஜயலட்சுமி – சீமான் விவகாரத்தில் தனக்கு நீயாயம் கிடைக்கவில்லை என புதிய வீடியோவில் அறிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலுறவு வைத்து ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்ததன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, சீமான் சார்பில் வக்கீல் நிர்னிமேஷ் துபே மேல்முறையீடு செய்த\ மனுவை உச்சநீதிமன்றம் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
சீமான் சார்பில் மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளையும், மேல்முறையீடு மனுவின் கோரிக்கைகளையும் சுட்டிக்காட்டி, 12 வாரங்களுக்குள் புலன்விசாரணையை நடத்தி முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
விசாரணையின் முடிவில் நீதிபதிகள், 12 வாரங்களுக்குள் புலன்விசாரணை செய்ய வேண்டும் என்ற சென்னை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். விசாரணையை மே 2-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். 2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காணட்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக புகார்தாரரும், தமிழ்நாடு அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இது குறித்து நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில்,
”உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி மக்களிடம் பேச விரும்புகிறேன். நேற்றைய தீர்ப்பின்படி செட்டில்மெண்ட் செய்ய கூறி உள்ளார்கள். இது பற்றி எனக்கு சீமான் ரூ.10 கோடி கொடுத்தார் என எழுத ஆரம்பித்து விடுவார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் எனது வழக்கை ரத்து செய்ய சொல்லி சீமான் வழக்கு தொடுத்தபோது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வாதாடினார்கள். அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேபோல உச்சநீதிமன்றத்தில் சீமானின் மேல்முறையீடு செய்தபோது என் சார்பாக ஏன் யாரும் வாதாட முன் வரவில்லை. நான் சீமானிடம் பேசினால் காசுக்காக செய்கிறேன் என சொல்கிறீர்களே, நேற்று ஏன் என் சார்பாக யாரும் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
எனக்கு நீதியும், நியாயும் இந்த வழக்கில் கிடைக்காது என்பதை தெரிந்துகொண்டே. இதை தாண்டி நான் எந்த போராட்டமும் நான் செய்யபோவதில்லை. யாரும் சீமானுக்கு எதிராக பேசுவதில்லை. எனவே இதில் இனிமேல் போராடும் அவசியம் எனக்கு கிடையாது. இதுவரை மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இதுதான் எனது கடைசி வீடியோ
எனத் தெரிவித்துள்ளார்..